×

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக கொடி பறக்காத திமுகவினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவளவிழாவை ஒட்டி திமுக கொடி ஏற்றிடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), தந்தை பெரியார் பிறந்தநாள் (செப்.17), திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் (செப்.17) என்ற மூன்றையும் இணைந்து ஆண்டுதோறும் முப்பெரும் விழாவை நடத்தி வருகிறது திமுக. இந்த ஆண்டு திமுக தொடங்கப்பட்டு 75வது ஆண்டு என்பதால் மிகச் சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்

அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு கழகத்தின் பவள விழா ஆண்டாக இருப்பதால் அனைத்து கழகத்தினர் வீடுகளிலும் கழக கொடியேற்றி கொண்டாட வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்காவில் இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் நேற்று பல்வேறு கட்சிப் பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக திமுகவின் பவளவிழாவை முன்னிட்டு கட்சியினர் அனைவரது இல்லங்கள்- அலுவலகங்கள்- வணிக வளாகங்களில் கட்சிக் கொடி ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றிடும் நோக்கத்துடன் பேரறிஞர் அண்ணா அவர்களால் 1949-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கலைஞர் கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024-ஆம் ஆண்டு தனது பவள விழா நிறைவினைக் கொண்டாடுகிறது.

பவளவிழாவையொட்டி தி.மு.கழகக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கழகத்திற்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் நம் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வீதிகள்தோறும் பறக்கும் இருவண்ணக்கொடி நம் வீடுகள்தோறும் பறந்திட வேண்டும். கழகக் கொடி பறக்காத கழகத்தினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் திமுக பவள விழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள் – அலுவலகங்கள் – வணிக வளாகங்களில் கழகக்கொடி ஏற்றிக் கொண்டாடுவோம்.” என அறிவுறுத்தி உள்ளார்.

The post திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Dhimuka Coral Festival ,Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,Dimuka Coral Festival ,Dhimuka ,festival ,Dima ,CM ,
× RELATED கதர் தொழிலுக்கு கை கொடுக்க, தேச நலன்...