புதுடெல்லி: அதானி குழும முறைகேட்டில் செபி விளக்கம் அளிப்பதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஹிண்டர்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழும முறைகேடு தொடர்பாக செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், அதானி குழுமத்தின் லாபத்தை பெருக்க செபியே பல சலுகைகள் அளித்திருப்பதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டுகிறது. செபி தலைவர் மாதபி புச்சிற்கு எதிராகவும் பல சந்தேகங்களை கிளப்பி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: செபியின் புதிய வெளிநாட்டு முதலீட்டாளர் விதிமுறைகளுக்கு இணங்குவதில் இருந்து மொரீஷியசை சேர்ந்த 2 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அவசர நிவாரணம் கோரி பத்திரங்கள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளன. இந்த 2 நிறுவனங்களும் அதானி குழும முறைகேட்டில் ஏற்கனவே குற்றச்சாட்டப்பட்ட நிறுவனங்களாகும். வெளிநாட்டு சந்தைகளில் முதலீடு செய்வதன் மூலம் இறுதி ஆதாயம் பெறும் நபரின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டுமென்ற விதிமுறையை செபி நீக்கியதால் பலன் அடைந்த நிறுவனங்கள் தான் இவை.
பின்னர் 2023 ஜூனில் பலதரப்பு அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவை செபி திரும்பப் பெற்றது. தற்போது, வரி சலுகைகள் தரும் வெளிநாடுகள் வழியாக கறுப்புப் பணம் மீண்டும் இந்திய சந்தைக்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக செபியின் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இணங்குவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 9ம் தேதி. இதில் நிவாரணம் கோரி 2 மொரீஷியஸ் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன.
இதுபோன்ற விதிமீறல்கள் குறித்த செபி விசாரணை நடத்தி 2 மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தருவதற்கு பதிலாக 18 மாதமாகியும் அதன் விசாரணை மோசமடைந்துள்ளது. செபி தலைவரின் பல முரண்பாடுகள் வெட்டவெளிச்சமாகி உள்ளதைத் தவிர, செபி விளக்கம் அளிப்பதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. இவ்வாறு கூறி உள்ளார்.
The post அதானி குழும முறைகேட்டில் செபி விளக்கம் அளிப்பதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன: விளக்கம் கேட்கிறது காங்கிரஸ் appeared first on Dinakaran.