மண்டபம்: அரசு பஸ் மீது, கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 ேபர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பகுதியில் நகைக்கடை தொழில் செய்து வருபவர் ராஜேஷ் (33). இவர், தனது மனைவி பாண்டிச்செல்வி (28), மகள்கள் தர்ஷிலா ராணி (8), பிரணவிகா (4), பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தை மற்றும் மாமனார் செந்தில் மனோகரன் (70), மாமியார் அங்காளேஸ்வரி (58) ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை காரில் ராமநாதபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றார்.
நள்ளிரவில் சொந்த ஊரான தங்கச்சிமடம் திரும்பினர். காரை பாம்பன் அருகே அக்காள்மடம் பகுதியை சேர்ந்த சபரி பிரிட்டோ (35) ஓட்டினார். உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை பகுதியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் கார் சென்றபோது, ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த அரசு பஸ் சாலையில் நின்றிருந்தது. அப்போது, ராஜேஷ் குடும்பத்தினர் சென்ற கார், எதிர்பாராதவிதமாக பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.
இடிபாடுகளில் சிக்கி படு காயமடைந்த ராஜேஷ், அவரது மகள்கள் தர்ஷிலா ராணி, பிரணவிகா, மாமனார் செந்தில் மனோகரன், மாமியார் அங்காளேஸ்வரி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயம் அடைந்த ராஜேஷ் மனைவி பாண்டிச்செல்வி, அவரது கைக்குழந்தை மற்றும் டிரைவர் சபரி பிரிட்டோ ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிந்து, அரசு பஸ் டிரைவர் கருப்பையாவிடம் விசாரிக்கின்றனர்.
* பைக்குகள் மோதி 3 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமரன் மகன் ஆகாஷ்(22). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். வந்தவாசி- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை வெண்குன்றம் அருகே சென்றபோது, எதிரே வந்தவாசி நோக்கி வந்த பைக் நேருக்குநேர் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தில் சிக்கிய மற்றொரு பைக்கில் வந்த இரட்டைவாடை செட்டி தெருவை சேர்ந்த பைக் மெக்கானிக் விஜயன்(33), அவருடன் அமர்ந்து வந்த சென்ட்ரிங் கூலித்தொழிலாளி சிவா(30) ஆகியோரும் பலியாகினர்.
The post அரசு பஸ் மீது கார் மோதி ஒரே குடும்பத்தில் 5 பேர் சாவு appeared first on Dinakaran.