×
Saravana Stores

விக்கிரவாண்டியில் 23ம் தேதி நடைபெற உள்ள விஜய் கட்சி மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் 23ம் தேதி நடைபெற உள்ள நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் 23ம் தேதி நடத்த திட்டமிட்டு, இதற்காக அனுமதி கேட்டு கடந்த மாதம் 28ம் தேதி எஸ்பியிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக கடந்த 2ம் தேதி விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ், 21 கேள்விகளை கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நோட்டீஸ் அளித்து, 5 நாட்களில் பதில் அளிக்கவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி 6ம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷிடம் காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்தார். அதில், ஏற்கனவே அனுமதி கடிதத்தில் 1.50 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில் விளக்க கடிதத்தில் 50,000 பேர் பங்கேற்பார்கள் என்றும், தமிழகம் முழுவதும் 100 பேருந்துகள், 250 வேன், 250 கார்களில் கட்சியினர் வரவுள்ளதாகவும், தீயணைப்பு வாகனம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநாடு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்குள் முடிவடையும் என்றும் தெரிவித்திருந்தனர்.

தவெக கட்சியின் விளக்க கடிதத்தை பெற்ற டிஎஸ்பி சுரேஷ், எஸ்பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாட்களில் அனுமதி தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணியளவில் மாநாட்டுக்கான அனுமதி கடிதத்தை மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜியிடம், டிஎஸ்பி சுரேஷ் வழங்கினார். அதில், காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு தெரிவித்த பதிலின் அடிப்படையில் போக்குவரத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பது உள்ளிட்ட 33 நிபந்தனையுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் துவக்கியுள்ளனர்.

* 33 நிபந்தனைகள்
தவெக மாநாடு நடத்த காவல்துறை 33 நிபந்தனைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மாநாடு நடைபெறும் பகுதி, பார்க்கிங் இடம் தொடர்பான முழுமையான வரைபடத்தை காவல்துறையிடம் அளிக்க வேண்டும். மாநாடு நடைபெறும் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபெறுவதால் போக்குவரத்து எக்காரணம் கொண்டும் பாதிக்காமல் இருக்க வேண்டும்.

அருகில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் அதனை சீரமைக்க தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். மாநாடு 2 மணிக்கு தொடங்குவதாக தெரிவித்துள்ளீர்கள். 1.30 மணிக்குள் மாநாட்டு பந்தலுக்கு தொண்டர்கள் வரவேண்டும். 2 மணிக்கு மேல் வருபவர்களை அனுமதிக்க கூடாது. விவசாய நிலம் என்பதால் அப்பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்.

அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதியில் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் இருந்து யார், யார் தலைமையில் கட்சியினர் வருகிறார்கள் என்ற பெயர் விவரங்களை காவல்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக இருக்கை போட்டு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாநாட்டுக்கு வரும் விஐபி விவரங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 33 நிபந்தனைகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post விக்கிரவாண்டியில் 23ம் தேதி நடைபெற உள்ள விஜய் கட்சி மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Vijay ,Vikravandi ,Villupuram ,Villupuram district ,Tamil Nadu Victory Association ,Vikravandi V.Salai ,
× RELATED ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய்...