பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த 28ம்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் 10வது நாளான நேற்று ஈட்டி எறிதலில் எப் 41 பிரிவில் இந்தியாாவின் 23 வயதான நவ்தீப் சிங் 47.32 மீட்டர் தூரம் வீசி 2வது இடத்தில் இருந்தார். ஈரான் வீரர் சாதிக் பேட் சாயா 47.64 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்தார். ஆனால் ஈரான் வீரர் காட்டிய செய்கைகள் மோசமானதாகவும், அச்சுறுத்தலாகவும் மற்றும் பொருத்தமற்றதாகவும் இருந்ததாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதாவது, அவர் கழுத்தை வெட்டுவது போன்று செய்கை காட்டி, ஹமாஸ் கொடியை கையில் தூக்கி காட்டினார். எனவே, 2 மஞ்சள் கார்டுகளை பெற்ற காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 2ம் இடம் பிடித்த நவ்தீப் சிங்கின் வெள்ளிப்பதக்கம், தங்கமாக மாற்றி வழங்கப்பட்டது.
முன்னதாக பெண்களுக்கான 200 மீட்டர் டி12 ஓட்டத்தில் இந்தியாவின் சிம்ரன் ஷர்மா 24.75 வினாடிகளில் கடந்து 3வது இடம்பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். கடந்த 10 நாட்களாக நடந்து வந்த பாரா ஒலிம்பிக் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று சில போட்டிகள் நடைபெறுகிறது. துடுப்பு படகு போட்டியில் அரையிறுதியில் இந்தியாவின் பூஜா ஓஜா பங்கேற்கிறார்.
இதில் வெற்றி பெற்றால் மாலை 3 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் பூஜா ஓஜா பங்கேற்பார். இந்திய நேரப்படி இரவு 11,30 மணிக்கு நிறைவுவிழா நடைபெற உள்ளது. ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெற்ற ஸ்டேட் டி பிரான்சிஸ் ஸ்டேடியத்தில் தான் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் இந்தியாவின் தேசிய கொடியை ப்ரீத்திபால், ஹர்விந்தர்சிங் ஏந்திச்செல்ல உள் ளனர். இந்தியா பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தமாக 29 பதக்கத்துடன் 16வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் சீனா, 2வது இடத்தில் கிரேட் பிரிட்டன், 3வது இடத்தில் அமெரிக்கா உள்ளன.
The post பாரா ஒலிம்பிக்கில் இன்றிரவு நிறைவு விழா; 29 பதக்கத்துடன் இந்தியா16வது இடம்; ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நவ்தீப் சிங் appeared first on Dinakaran.