×
Saravana Stores

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது


* ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் சுற்றிவளைத்தனர்
* மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் பேச்சு எப்போதும் அறிவியலுக்கும், கல்விக்கும் புறம்பாக இருக்கும்.
* மாணவர்களின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும்.
* மதரீதியாகவும், ஆபாசமாகவும் சொற்பொழிவு என்கிற பெயரில் விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வந்தார்.

சென்னை: மாணவர்கள் மத்தியில் சர்ச்சையான வகையில் பேசிய மூட நம்பிக்கை பேச்சாளர் மீது மாற்றுதிறனாளி சங்கத்தினர் புகார் கொடுத்த நிலையில், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய அவரை நேற்று போலீசார் விமான நிலையத்தில் சுற்றி வளைத்து கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யார் இந்த மூட நம்பிக்கை பேச்சாளர் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை அசோக் நகரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் ஆண்டு விழாவில் தன்னம்பிக்கை பேச்சாளர் என்ற பெயரில் மகாவிஷ்ணு என்பவர் சிறப்புரையாற்றியிருந்தார். அவர் பேசிய விஷயங்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் அறிவியலுக்கும், கல்விக்கும் புறம்பாகவும், மாணவர்களின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் வகையிலும், மனிதர்களின் பிறப்பை முன்ஜென்ம பாவத்தின் அடையாளமாகவும், மாணவிகளிடையே மதரீதியாகவும், ஆபாசமாகவும் சொற்பொழிவு என்கிற பெயரில் விஷமத்தனமான கருத்துக்களை பரப்பியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இவரது பேச்சு தமிழ்நாடு முழுக்க சர்ச்சையாகி உள்ளது. மூட நம்பிக்கையை தூண்டும் வகையில் பேசியது மட்டுமன்றி, அரசு பள்ளி ஆசிரியரை அவமானப்படுத்தியதும் கண்டனங்களை சந்தித்து வருகிறது. பலரும் கண்டித்து வருகின்றனர். இவரை மேடையிலேயே சங்கர் என்ற ஆசிரியர் ஒருவர் மட்டும் எதிர்த்து பேசிய சம்பவமும் கவனம் பெற்றுள்ளது. சங்கர் என்ற இந்த பார்வையற்ற தமிழாசிரியரை அங்கேயே மகா விஷ்ணு கிண்டல் செய்யும் வகையில் அவமானப்படுத்தி உள்ளார். சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சிறப்பு விருந்தினரை எதிர்த்து குரல் கொடுத்த ஆசிரியர் சங்கர் தமிழ்நாடு முழுக்க பாராட்டுகளை பெற்று வருகிறார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிரடி விசாரணையில் இறங்கியது. எந்த பள்ளியில் மூட நம்பிக்கை கருத்துக்கள் விதைக்கப்பட்டதோ, அதே பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு நடத்தினார்.

மட்டுமல்லாது தேர்வுக்கான மற்றொரு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், விஷம கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை எதிர்த்து கேள்வி எழுப்பிய, மாற்று திறனாளி ஆசிரியர் கவுரவிக்கப்பட்டார். மறுபுறம் பள்ளிக்கல்வித்துறையின் விசாரணையின் அடிப்படையில், பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேநேரம், சர்ச்சைக்குரிய வகையில் பள்ளியில் பேசிய மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். முன்ஜென்ம பாவ, புண்ணியத்தால் தான் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என அவர் பேசியது எங்களுக்கு எதிரான வன்செயலாக கருதுகிறோம் என்று இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, மகாவிஷ்ணு பல்வேறு பள்ளிகளில் இதுபோன்ற சொற்பொழிவு நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. எந்தெந்த பள்ளிகளில் என்னென்ன தலைப்புகளில் அவர் பேசியுள்ளார் என்ற பல கோணத்தில் விசாரணை நடக்கிறது. மகா விஷ்ணு சைதாப்பேட்டை அரசு பள்ளியிலும் பேசிய விவகாரத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மகா விஷ்ணு நடத்தி வரும் பரம்பொருள் அறக்கட்டளை குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும், இந்த அறக்கட்டளைக்கு பல நாடுகளில் கிளைகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பரம்பொருள் அறக்கட்டளையின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார், உளவு பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் இதற்கு கிளைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், மகா விஷ்ணுவின் பின்னணி, அறக்கட்டளையின் வருவாய் மற்றும் என்னென்ன பணிகளில் ஈடுபடுகிறார் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, வீடியோ மூலம் பேசிய மகா விஷ்ணு, தான் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் நேற்று மதியம் 1.10 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பும் அவரை விமான நிலையத்தில் கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் மகாவிஷ்ணு, ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் இருந்து, விமானம் மூலம் சிங்கப்பூர் வந்து, அங்கிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தார். நேற்று சனிக்கிழமை பகல் 1.10 மணிக்கு வர வேண்டிய விமானம், முன்னதாகவே பகல் 12.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்ந்தது. இதற்கிடையே மகாவிஷ்ணு சென்னை வருகையை ஒட்டி, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். குறிப்பாக மகாவிஷ்ணு வெளியில் வரக்கூடிய 5ம் எண் கேட் வாசலில், சென்னை மாநகர போலீசார், போலீஸ் அதிகாரிகள், அதோடு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் நின்று கண்காணித்தனர். அதோடு ஏராளமான ஊடகங்களும் அந்த 5ம் எண் கேட் அருகே குவிந்திருந்தனர். இதற்கிடையே மகாவிஷ்ணு வழக்கமான வழியில் வெளியே வந்தால், ஊடகங்கள் அவரை சூழ்ந்து கொண்டு பேட்டி எடுக்க முயற்சிப்பார்கள் என்பதால், அந்த இடத்தில் பிரச்சனைகள் ஏதாவது ஏற்படும் என்று போலீசார் கருதினர்.

இதையடுத்து, சென்னை மாநகர போலீசார், விமான நிலைய உயர் அதிகாரிகள், பிசிஏஎஸ் எனப்படும் விமான பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு உயர் அதிகாரி ஆகியோரிடம் தொடர்பு கொண்டனர்.  அதோடு மகாவிஷ்ணு, சர்வதேச விமான நிலையம் வருகை பகுதி வழியாக வெளியில் வராமல், மாற்று வழியான, புறப்பாடு பகுதி வழியாக வெளியில் அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. அதற்கு இந்திய விமான நிலைய ஆணையமும் அனுமதி வழங்கியது. இதை அடுத்து சாதாரண உடையில் இருந்த போலீசார், மகாவிஷ்ணுவை வருகை பகுதியில் இருந்து லிப்ட் மூலமாக, இரண்டாவது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் வழியாக, வெளியே அழைத்து வந்து, போலீஸ் வேனில் ஏற்றாமல், சாதாரண கார் ஒன்றில் ஏற்றிக் கொண்டு, சென்னை நகருக்கு அழைத்து சென்றனர்.

அவரிடம் சென்னை தெற்கு இணை ஆணையர் சி.பி.சக்கரவர்த்தி, அடையாறு துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். பல்வேறு தரப்பினர் அளித்த புகார்கள் தொடர்பாகவும் மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி பின் கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் சர்ச்சையான பேச்சு மூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று விட்டு, மீண்டும் சிங்கப்பூர் வழியாக சென்னை திரும்பிய வரை, சென்னை விமான நிலையத்தில், சென்னை மாநகர போலீஸ் தனிப்படை சுற்றி வளைத்து கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது appeared first on Dinakaran.

Tags : Mahavishnu ,CHENNAI ,AUSTRALIA ,
× RELATED காமன்வெல்த் மாநாடு நவ.5ல் ஆஸ்திரேலியா செல்கிறார் சபாநாயகர் அப்பாவு