×

வில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு

வில்லிபுத்தூர், செப்.7: வில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தின் அடிப்படையில் வில்லிபுத்தூர் நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின்படியும், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பாக்யலட்சுமி ஆலோசனையின் பேரிலும் மரக்கன்றுகள் நடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வில்லிபுத்தூர் தாலுகா மல்லி முதல் கிருஷ்ணன்கோவில் வரை உள்ள சாலையோரத்தில் சுமார் 700 மரக்கன்றுகளும் வத்திராயிருப்பு தாலுகா காடனேரி சாலையில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும் நடப்பட்டு நெடுஞ்சாலை துறை பணியாளர்களை கொண்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட சாலைகளில் சுமார் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இவை தினமும் தண்ணீர் ஊற்றி நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி பறவைகளுக்கு புகலிடமாகவும் பல்லுயிர் பெருக்கம் ஏற்பட உதவும் வகையிலும் உள்ளது என தெரிவித்தார்.

The post வில்லிபுத்தூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு appeared first on Dinakaran.

Tags : Williputhur Highway Department ,Highways Department ,Villiputhur Highway Department ,Tamil Nadu Government ,Virudhunagar district ,
× RELATED கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுவரும்...