நெல்லை: நெல்லை தாழையூத்தில் நேற்று துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆன்மிக ரீதியான வகுப்பு நடத்தப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. பள்ளி நிகழ்வில் சனாதன கருத்துக்களை பேச அனுமதி அளித்த பள்ளி நிர்வாகி மீது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பதுடன் இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கையை பாஜ ஆளும் மாநிலங்களை தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் எதிர்க்கின்றன. பிஎம் திட்டத்தின் மூலம் தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிப்பதை ஏற்க முடியாது. கல்வி வளர்ச்சியில் ஏற்கனவே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எனவே இருமொழி கல்விக் கொள்கையே தமிழ்நாட்டிற்கு ஏற்புடையது.
சமஸ்கிரும், இந்தி போன்றவற்றை திணிக்க முயலக்கூடாது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை தர மறுத்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும். திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் எங்கள் கூட்டணி தொடரும். இவ்வாறு துரை வைகோ கூறினார்.
The post சமஸ்கிருதம், இந்தியை திணிக்க கூடாது; இருமொழி கல்விக் கொள்கையே தமிழ்நாட்டிற்கு ஏற்புடையது: துரை வைகோ பேட்டி appeared first on Dinakaran.