தஞ்சாவூர்: பெண்ணுக்கு லிப்ட் கொடுப்பதாக பைக்கில் அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது தப்பிக்க முயன்றதில் ஆற்று பாலத்தில் பைக்குகள் மோதி கை, காலில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்தவர் திருமணமான 43 வயது பெண். கூலித் தொழிலாளி. இவர் மகள் வீட்டிற்கு செல்ல கடந்த 3ம் தேதி இரவு பூதலூர் பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது அவ்வழியாக ராயந்தூரை சேர்ந்த பிரவீன் (32), ராஜ்கபூர் (25) ஆகிய இருவரும் தனித்தனி பைக்கில் வந்துள்ளனர். இரவு நேரத்தில் தனியாக அந்த பெண் நிற்பதை பார்த்து உங்கள் ஊரில் கொண்டு விடுகிறோம் பைக்கில் வாருங்கள் என்று கூறி பிரவீன் அழைத்துள்ளார். பக்கத்து ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பெண் பிரவீனின் பைக்கில் ஏறி அமர்ந்துள்ளார்.
பின்னால் மற்றொரு பைக்கில் ராஜ்கபூர் வந்துள்ளார். பூதலூர் அருகே பாலாயிகுளம் பகுதியில் ஆள் இல்லாத வயல் பகுதிக்கு சட்டென்று பைக்கை திருப்பி உள்ளார் பிரவீன். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். உடன் பிரவீனும், ராஜ்கபூரும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி இழுத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வருவதாக கூறிய அம்மா வரவில்லையே என்று அந்த பெண்ணின் மகள் கவலையடைந்து உறவினரை விட்டு பார்த்து வர சொல்லியுள்ளார். அவர் தேடி வந்தபோது அந்த பெண் அழுதுகொண்டு இருப்பதை பார்த்து அங்கு சென்றுள்ளார். அவரை பார்த்ததும் பிரவீன், ராஜ்கபூர் இருவரும் தப்பி சென்று விட்டனர். கூட்டு பலாத்காரம் குறித்து அந்த பெண் பூதலூர் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்து ராயந்தூரை சேர்ந்த பிரவீன், ராஜ்கபூர் ஆகியோரை பிடிக்க சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் இருவரும் பைக்கில் தப்பி செல்ல முயன்ற போது குணமங்கலம் பகுதியில் வாய்க்கால் பாலத்தில் மோதி கீழே விழுந்தனர். இதில் ராஜ்கபூருக்கு கையிலும், பிரவீனுக்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெண் டிஎஸ்பியை தாக்கியவர் தப்பி ஓடியபோது கை முறிவு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் காளிக்குமார்(28) கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிலரை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரியை நெஞ்சில் கை வைத்து தள்ளியும் தலைமுடியை பிடித்து இழுத்தும் தாக்கினர். இது தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம்உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து 7 பேரை கைது செய்தனர். தலைமறைவான முத்துப்பட்டியைச் சேர்ந்த முருகேசன், நேற்றுமுன்தினம் இரவு தொப்பலாக்கரை பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு போலீசார் சென்றனர். அப்போது போலீசாரைக் கண்டதும், முருகேசன் தப்பியோட முயன்றபோது தவறி விழுந்து வலது கையில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவரைக் கைது செய்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
The post பைக்கில் லிப்ட் கொடுத்து பெண் கூட்டு பலாத்காரம்: தப்ப முயன்ற வாலிபர்கள் கால், கை முறிவு appeared first on Dinakaran.