×
Saravana Stores

சிவகிரியில் விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை

சிவகிரி: சிவகிரி அருகே விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகாவுக்குட்பட்ட குளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மண் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சிவகிரி தென்கால் கண்மாயில் 21 வாகனங்களுக்கு மட்டுமே மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் விதிமுறை மீறி 28 வாகனங்களில் மணல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மண் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. மாறாக, தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளைகளில் மண் விற்பனை செய்து சிலர் வருவாய் ஈட்டி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘சிவகிரி தென்கால் கண்மாயில் மண் அள்ளுவதற்கு அனுமதி வருவதற்கு முன்பாகவே 28 வாகனங்களில் மண் அள்ளி வைத்துள்ளனர்.

மண் அள்ள 21 வாகனங்களுக்கு மட்டுமே உரிமை வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் விதிமுறை மீறி 28 வாகனங்களில் அள்ளிய மண்ணை கொண்டு சென்றனர். இவ்வாறு அள்ளப்படும் இந்த மண் செங்கல் சூளைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் இது குறித்து மாவட்ட நிர்வாகம், கனிம வளத்துறை உரிய ஆய்வு மேற்கொள்ளவில்லை. இதை பயன்படுத்தி கொண்டு விதிமுறை மீறி மண் அள்ளுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயத்துக்கு தான் மண் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post சிவகிரியில் விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,Tenkasi district ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன நெருக்கடியால் வீடியோ வெளியிட்டு பாடகர் தற்கொலை