×

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கொடூரக் குற்றங்களை செய்யும் குற்றவாளி அல்ல : ஜாமீன் கோரிய வழக்கில் அபிஷேக் சிங்வி வாதம்

டெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ததற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைக்காததால், கெஜ்ரிவால் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சிபிஐ வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கெஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “சமூதாயத்திற்கு கெஜ்ரிவால் அச்சுறுத்தலாக இல்லை.

அமலாக்கத்துறை வழக்கில் விசாரணை நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஜாமீன் வழங்கியுள்ளது. ஆனால், ஜாமீன் கிடைத்த பின்னர் சிபிஐ கைது செய்துள்ளது. மே 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜூலை 12-ல் உச்ச நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பித்தது. மே 10-ல் இருந்து ஜூலை 12-க்குள்ளாக ஜூன் மாதம் கெஜ்ரிவாலை சிபிஐ கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன?. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் கைதான மணிஷ் சிசோடியா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். மதுபான கொள்கை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சஞ்சய் சிங், விஜய் நாயர், கே.கவிதா ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

.கெஜ்ரிவால் மட்டுமே இன்றும் ஜாமின் பெற முடியாமல் சிறையில் இருக்கிறார். அமலாக்கப்பிரிவு வழக்கில் காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஜூன் 26-ல் கைது செய்துள்ளது சிபிஐடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ய எந்த அடிப்படையும் இல்லை. விசாரணையை சீர்குலைப்பார்; சாட்சிகளை கலைத்துவிடுவார் என்பதையெல்லாம் கைதுக்கு காரணமாக்க முடியாது. கெல்ரிவால் வழக்கு தனித்துவமானது; வினோதமானது; அவரை விடுவிக்க ஏற்கனவே பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஜாமின் வழங்குவதுதான் சட்டவிதி; சிறையில் அடைப்பது என்பது விதிவிலக்கு. டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கொடூரக் குற்றங்களை செய்யும் குற்றவாளி அல்ல. வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டது போல் விசாரணைக் காலத்தில் ஒருவரை சிறையில் அடைக்க கூடாது. ஒருவரை நீண்டகாலத்துக்கு வழக்கு விசாரணையே நடக்காமல் சிறையில் அடைத்துவைக்க முடியாது.

சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் கெஜ்ரிவால் பெயர் இடம்பெறவில்லை. சாட்சி என்று கூறி வரவழைத்து 8 முதல் 9 மணி நேரம் வரை கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. மார்ச் 24-ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கப்பிரிவுதான் கைது செய்தது; சிபிஐ அல்ல. 2022-ல் தொடங்கிய வழக்கில் 2024 மார்ச் மாதம் கெஜ்ரிவாலை அமலாக்கப் பிரிவு கைது செய்தது. 2024 ஜனவரிக்குப் பிறகு எந்த சாட்சியையும் சிபிஐ விசாரிக்கவில்லை. ஜூன் 26-ம் தேதி கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ய காரணமாக
என்ன நடந்தது?,”இவ்வாறு வாதிட்டார்.

இதைத் தொடர்ந்து சிபிஐ தரப்பில், “இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என அணுகிய பிறகே உச்ச நீதிமன்றம் வந்தனர்.” என தெரிவிக்கப்பட்டது. இதற்கு, வழக்கு தொடர்பாக வாதாடுங்கள். ஜாமின் கோரி எந்த நீதிமன்றத்தை முதலில் அணுக வேண்டும் என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த உச்சநீதிமன்றம்,”வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதத்தையே நாங்கள் எதிர்க்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றால், அதன் பிறகு வாதிட ஒன்றும் இல்லை,” என வாதிட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

The post டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கொடூரக் குற்றங்களை செய்யும் குற்றவாளி அல்ல : ஜாமீன் கோரிய வழக்கில் அபிஷேக் சிங்வி வாதம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,CM Kejriwal ,Abhishek Singhvi ,CBI ,Arvind Kejriwal ,Supreme Court ,Chief Minister ,Kejriwal ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கிய ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி