×

ரூ.3 கோடி மோசடியில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜி தேடப்படும் குற்றவாளி: குற்றப்பிரிவு போலீஸ் அறிவிப்பு; வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க நடவடிக்கை

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவரை தேடப்படும் குற்றவாளி என குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு ‘‘லுக் அவுட் நோட்டீஸ்’’ அனுப்பி உள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன், தனது சகோதரி மகன் ஆனந்திற்கு விருதுநகர் ஆவின் மேலாளர் வேலைக்காக ரூ.30 லட்சத்தை முன்னாள் அமைச்சர் காளிமுத்து தம்பி விஜயநல்லதம்பியிடம் கொடுத்துள்ளார். ஆவினில் வேலை வாங்கி தராததை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த நவ. 15ல் ரவீந்திரன் புகார் அளித்தன் பேரில் விஜயநல்லதம்பியை பிடித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் ரவீந்திரன் உட்பட பலரிடம் ஆவினில் வேலைக்காக ரூ.3 கோடி பெற்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்டோரிடம் அளித்ததாக விஜயநல்லதம்பி புகார் செய்தார். இதன் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி உட்பட 4 பேர் மீதும் 5 பிரிவின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிச. 17ல் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார்.அவரை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையில் 8 தனிப்படைகள் தேடி வருகின்றன. அவரது  உறவினர்கள், தொடர்பாளர்கள், ஆதரவாளர்கள் உள்பட 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜேந்திரபாலாஜி மதுரை, பெங்களுர், கேரளா, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் பகுதியில் எங்காவது பதுங்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் தலைமறைவாகி இருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் நேற்று ‘‘லுக் அவுட் நோட்டீஸ்’’ அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் வாங்கி கொண்டு மோசடி செய்ததாக சாத்தூரை சேர்ந்த நபர், எஸ்பி மனோகரிடம் நேற்று அளித்த புகார் மனுவின் அடிப்படையில் ராஜேந்திரபாலாஜி மீது மற்றொரு வழக்கு பதியப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.* `நூற்றுக்கும் மேற்பட்ட சிம்களை வைத்துள்ளார்’தலைமறைவாக உள்ள மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, நூற்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்துள்ளார் என்றும், ஒரு சிம் கார்டை ஒருமுறை மட்டும் பயன்படுத்தி பேசி விட்டு, உடைத்து விடுகிறார் என்றும் இதனால் அவர் மறைந்திருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெறும் முயற்சிகளில் அவரது வக்கீல்கள் தீவிரமாக உள்ளனர். ஆனால், தனது வக்கீல்களிடமும் அவர் நேரடியாக பேசுவதில்லை என்றும், அவரிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் மாறி, மாறி 5 பேர் வரை அனுப்பப்பட்டு, பின்னரே வக்கீல்களுக்கு சென்று சேருகின்றன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்….

The post ரூ.3 கோடி மோசடியில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜி தேடப்படும் குற்றவாளி: குற்றப்பிரிவு போலீஸ் அறிவிப்பு; வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajendra Balaji ,Virudunagar ,Former minister ,Rajendrapalaji ,Aavin ,Dinakaran ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள்...