×
Saravana Stores

1000 ஆண்டுகள் பழமையான சீர்காழி சிவன் கோயிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை தருமபுரம் ஆதீனம் விற்றதாக புகார்: அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சீர்காழி சிவன் கோயிலின் 200 ஏக்கர் விவசாய நிலங்களை தருமபுரம் ஆதினம் விற்றதாக அளிக்கப்பட்ட புகார் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக இந்து சைவ கோயில்கள் பாதுகாப்பு மற்றும் தெய்வநெறி பரப்பும் சங்கம் சார்பில் அதன் செயலாளர் பாலசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மயிலாடு துறை மாவட்ட சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு சட்டநாத சாமி கோயில் என்ற சிவன் கோயில் உள்ளது. சோழர் பேரரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோயிலுக்கு 500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலங்களை குத்தகை விட்டு அதன் மூலம் தர்மபுரம் ஆதீனத்திற்கு வருவாய் ஈட்டி தரப்பட்டு வந்தது.

இந்நிலையில், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் சென்ற பின், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது கோயிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலங்கள் விற்கப்பட்டது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் 1500 கோடி ரூபாய் ஆகும். அதேபோல், சமீபத்தில் இக்கோயிலின் கண்காணிப்பாளர், தருமபுரம் ஆதினத்துடன் இணைந்து 8 ஏக்கர் நிலத்தை தனிநபருக்கு மாற்றியுள்ளது தெரியவந்தது. இதை எதிர்த்து புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, கோயில் நிலத்தை மீட்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆஜராகி, சீர்காழியில் உள்ள அருள்மிகு சட்டநாத சாமி கோயிலின் நிலங்களை தனிநபருக்கு மாற்றிய தருமபுரம் ஆதினம், கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுத்து கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்று வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 6 வாரங்களில் மனுதாரரின் புகார் மனு மீது உரிய பரிசீலனை செய்து சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டார்.

The post 1000 ஆண்டுகள் பழமையான சீர்காழி சிவன் கோயிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை தருமபுரம் ஆதீனம் விற்றதாக புகார்: அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Shiva Temple ,Darumapuram ,Atheenam ,ICourt ,CHENNAI ,Chennai High Court ,Hindu Religious Endowment Department ,Sirkazhi Shiva Temple ,Darumapuram Adinam ,Tamil Nadu ,Darumapuram Atheenam ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் திமுக சார்பில் வாக்குச்சாவடி நிலைய முகவர்கள்ஆய்வு கூட்டம்