சென்னை : சென்னையில் ரோந்துப் பணியின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ரவிக்குமார் (வயது 59) என்பவர் நேற்று (3-9-2024) காலை மீனம்பாக்கம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் காலை 11.15 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையோரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
முதல்நிலைக் காவலர் திரு. ரவிக்குமார் அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.திரு.ரவிக்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரோந்துப் பணியின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை!! appeared first on Dinakaran.