×
Saravana Stores

பரந்தூர் விமான நிலைய திட்டம்: ஏகனாபுரம் கிராமத்தில் மீண்டும் நிலம் எடுக்கும் அறிவிப்பு வெளியீடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 20 கிராமங்களை உள்ளடக்கி 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு உண்டான பணிகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் தங்களுடைய வீடுகள், விலை நிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாக கூறி தொடர்ந்து இன்று வரை 771 நாட்களாக தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் ஏகனாபுரம் கிராமத்தை தவிர்த்துவிட்டு மற்ற பகுதிகளில் நில எடுப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து ஏகனாபுரம் மக்கள் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் கடந்த 28ம் தேதி 153 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, ஏகனாபுரம் கிராமமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில்,125 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போராட்டத்தின் போது தங்களுடைய நிலத்தை எடுக்க முயன்றால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையானது மீண்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் 8 பிரிவுகளாக பிரித்து 234 ஏக்கர் நிலம் கையக படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இத்தகைய அறிவிப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பரந்தூர் விமான நிலைய திட்டம்: ஏகனாபுரம் கிராமத்தில் மீண்டும் நிலம் எடுக்கும் அறிவிப்பு வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Ekanapuram ,Kanchipuram ,Paranthur Greenway Airport ,Kanchipuram district ,Paranthur ,Union ,State Governments ,Paranthur… ,Airport ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட...