திருச்சி: ‘சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பலியான விவகாரத்தில் அந்நிறுவனத்தின் குடோனில் 800 கிலோ காலவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் குரங்கம்மை நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: குரங்கம்மை என்ற தொற்று உலகை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளதால் அனைத்து விமான நிலையங்களிலும் இந்த நோய்தொற்று குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 விமான நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடல் வெப்பத்தை அளவிடும் கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு விமான நிலையத்திலும் தனிமைப்படுத்தப்படும் வார்டு அறை தயார் நிலையில் உள்ளது.
பன்னாட்டு விமான நிலையங்கள் அமைந்துள்ள திருச்சியில் கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, மதுரையில் ராஜாஜி அரசு பொது மருத்துவமனை, கோவையில் கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இதற்கென்று 10 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகள் தயார் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை இல்லை. மழையால் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகி டெங்கு பரவல் அதிகமாகி உள்ளது. இந்தாண்டு (கடந்த 8மாதங்களில்) டெங்கு பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் இறப்பின் எண்ணிக்கை குறைந்து 4 பேராக உள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், டெங்கு பாதிப்பு அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து பாதிப்பு நடவடிக்கைகளை கண்காணித்து சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அரியமங்கலம் பகுதியில் ஆன்லைன் மூலம் சைனீஸ் புல்டாக் என்ற நூடுல்ஸ், கோக் ஆர்டர் செய்து சாப்பிட்ட பள்ளி மாணவி பலியாகி உள்ளார். இதுதொடர்பாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட குடோனுக்கு சென்று பார்த்தபோது, 800 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, ஆய்விற்காக அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்
The post சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பலி 800 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.