×

இரு நாட்டு பயணத்தின் முதல் கட்டமாக புருனே சென்றார் பிரதமர் மோடி: சுல்தான் ஹசனலுடன் இன்று சந்திப்பு

பண்டார் செரி பெகவான்: இரு நாட்டு பயணத்தின் முதல் கட்டமாக புருனே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். தென் கிழக்கு ஆசியாவில் உள்ள புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார். இப்பயணத்தின் முதல் கட்டமாக அவர் புருனே நாட்டை சென்றடைந்தார். புருனே நாடு கடந்த 1984ம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா, புருனே இடையே தூதரக உறவு நீடிக்கிறது. இருதரப்பு உறவு 40 ஆண்டுகளை கடந்த போதிலும், இதுவரை இந்தியாவிலிருந்து எந்த பிரதமரும் புருனேவுக்கு சென்றதில்லை.

அந்த வகையில், புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் என்பதால் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. புருனே பட்டத்து இளவரசர் ஹாஜி அல் முஹ்ததீ பில்லா, பிரதமர் மோடியை வரவேற்றார். அங்கு சென்றதும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நமது இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளை எதிர்நோக்குகிறோம். குறிப்பாக, வணிக, கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துவதில் ஆவலுடன் உள்ளேன்’’ என பதிவிட்டார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தங்கும் ஓட்டலுக்கு வந்த இந்திய வம்சாவளியினர் அங்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மாலையில், இந்திய தூதரகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைத்த மோடி, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார்.

பிரதமர் மோடி, புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போகியா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று நடக்கிறது. இதில், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், சுகாதார ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புருனேயுடன் இந்தியாவின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் பேசுகிறார்கள். புருனேவைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியென் லூங் ஆகியோரை சந்திக்கிறார். பல்வேறு தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

The post இரு நாட்டு பயணத்தின் முதல் கட்டமாக புருனே சென்றார் பிரதமர் மோடி: சுல்தான் ஹசனலுடன் இன்று சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Brunei ,Sultan Hassanal ,Bandar Seri Begawan ,Sultan Haji Hasanal Bolkiah ,South East Asia ,Dinakaran ,
× RELATED ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு ராமதாஸ் கடிதம்