×
Saravana Stores

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு உட்பட 6 விமானம் திடீர் ரத்து: பயணிகள் கடும் அவதி

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு உள்ளிட்ட 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். லண்டனில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு மீண்டும் அதே விமானம் அதிகாலை 5.35 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். இந்த விமானத்தில் இன்று சென்னையில் இருந்து லண்டன் செல்வதற்காக 284 பயணிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாலை 2.30 மணிக்கு முன்னதாகவே வந்து காத்திருந்தனர்.

ஆனால், லண்டனில் இருந்து புறப்பட்டு வரவேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன் விமானநிலையத்தில் இருந்து இதுவரை வரவில்லை. இதனால் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதில் பயணம் செய்ய வந்த பயணிகள், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் நாளை புதன்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்லவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 1.30 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூர் செல்லவேண்டிய ஆகாஷா பயணிகள் விமானம், பெங்களூரில் இருந்து இன்று காலை 7.5 மணிக்கு சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் ஒரு மணிக்கு அந்தமானிலிருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் இன்று ரத்து என அறிவிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் வருகை, புறப்பாடு விமானங்கள் என 6 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள் ளாகியுள்ளனர்.

The post சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு உட்பட 6 விமானம் திடீர் ரத்து: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : London ,Andaman ,Bangalore ,Chennai Airport ,Chennai International Airport ,
× RELATED எக்ஸ் தளத்தில் இருந்து விலகிய லண்டனை...