சென்னை: மாநில பாடத்திட்டம் குறித்து ஆளுநர் கூறிய பிழையான கருத்தைத் திரும்பப் பெறவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாநில பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருக்கிறது என்று தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்என் ரவி பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆளுநர் ரவியின் பேச்சு அடிப்படை ஆதாரமற்றது. உண்மையில் இவர் ஒன்றிய நுண்ணறிவு அமைப்பில் (ஐபி) பணியாற்றியவர் தானே தவிரக் கல்வியாளர் அல்ல.
மாணவர்களிடம் உரையாடியதன் வாயிலாக அவர்களின் தனித்திறனை அறிந்து கொள்ளமுடியுமா? மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, விஞ்ஞானிகளாக, கணித மேதைகளாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக இந்தியாவின் பலமாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் சிறந்து விளங்குவதோடு செயலாற்றியும்வருகின்றனர். இந்த நிலையில், மாநில பாடத்திட்டம் தரம் குறைந்தது என்று எந்தமதிப்பீட்டின் அடிப்படையில் ஆளுநர் சொல்கிறார் என்று தெரியவில்லை. எந்த பாடத்திட்டத்தோடு தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை இவர் ஒப்பீடு செய்து இந்தமுடிவுக்கு வந்தார்.
பொறுப்புள்ள அதிகாரத்தில் இருக்கும் இவர் மூன்றாம் தரஅரசியல்வாதி போல மேடைகளில் பேசுவது சிறந்த வழிமுறையாகாது. பாடத்திட்டம் இதனை விடச் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு அதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து எழுத்துப்பூர்வமாகத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்குஅனுப்பி கருத்துக் கேட்டிருக்க வேண்டும். மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றமும், “தமிழ்நாடு மாநில பாடத்திட்டம்தரமற்றது” என்ற வாதத்தை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில பாடத்திட்டத்தைத் தமிழக அரசு தொடர்ந்து சமச்சீர்க் கல்வி முறையில் செழுமைப்படுத்திவருகிறது.
தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையையும் ஆசிரியர்களையும், மாணவர்களையும்சிறுமைப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. உடனடியாகஇந்தக் கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
The post மாநில பாடத்திட்டம் குறித்து ஆளுநர் கூறிய பிழையான கருத்தைத் திரும்பப் பெறவேண்டும்: ஜவாஹிருல்லா appeared first on Dinakaran.