×

சேலம் அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 528 லிட்டர் தாய்ப்பால் தானம்: விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம்

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேபோல், ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சேலம்: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 528 லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,962 பச்சிளங் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு சார்பாக, தாய்ப்பால் வாரவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து தாய்மார்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்லூரி மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்து வருகின்றனர். குழந்தைகளுக்கு முதல் தடுப்பு மருந்தாகவும், அனைத்து ஊட்டச்சத்துகளும் கொடுக்கும் அருமருந்தாகவும் தாய்ப்பால் உள்ளது. குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும், கண் பார்வைக்கு தேவையான வைட்டமின்-ஏ சத்து நிறைந்தாகவும் தாய்ப்பால் காணப்படுகிறது.

சீம்பாலில் உள்ள வௌ்ளை அணுக்கள் வயிற்றுப் போக்கு, சுவாசத்தொற்று போன்ற நோய்களை தடுக்கும் சக்தி வாய்ந்தவையாக காணப்படுகிறது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதேபோல், ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கூறியதாவது: குழந்தைகள் தாய்ப்பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும், சிறந்த ஊட்டச்சத்து மற்றும் புத்தி கூர்மையினையும் பெறுகின்றனர். குழந்தைக்கு தேவையான அளவு தண்ணீர் தாய்ப்பாலிலேயே கிடைக்கிறது. தாய் மற்றும் சேய்க்கு இடையே ஆரோக்கியமான உறவு வளரும். தாய்ப்பால் கொடுப்பதால் அடுத்த குழந்தை பிறப்பை தள்ளிப்போடவும் ஒரு வாய்ப்பாக அமையும். மேலும், தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக மற்றும் கர்ப்பபை புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

சர்க்கரை தண்ணீர், தேன் கலந்த தண்ணீர் புகட்டுவது, வசம்பு கொடுப்பது, சாம்பிராணி புகை போடுவது, மூக்கில் ஊதி சளி எடுப்பது, மூக்கில் எண்ணெய் முட்டை விடுவது கண்டிப்பாக செய்யக்கூடாது. பாட்டிலில் பால் கொடுக்க கூடாது. இவ்வாறு கொடுப்பதன் மூலம் நோய்க்கிருமி தாக்கம் மற்றும் ஊட்டச்சத்து குறைவு ஏற்படும். அதேபோல், குறிப்பிட்ட ேததிகளில் தவறாமல் தடுப்பூசி போடுவது அவசியமாகும். கை கழுவாமல் குழந்தையை தொடுவது, தொப்புள் கொடியிலும், அது விழுந்த பின்னரும் சாம்பல், மாட்டுச் சாணம், மருந்து, பவுடர் எதுவும் வைக்க கூடாது. குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு வீட்டிலும், கங்காரு சேய் பராமரிப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். குழந்தை பால் குடிக்காமல் சோர்வாக இருப்பது, இருமல், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசமாக இருத்தல், இடைவிடாமல் அழுதால் வீட்டில் கை வைத்தியம் செய்யாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும்.

தாய்ப்பால் கொடுப்பது சம்மந்தமான சந்ேதகம் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர்களை அணுகலாம். குடும்பத்தில் பிரசவம் அடைந்த தாய்மார்களை குழந்தைக்கு பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்கவும், ஆறுமாதம் வரை தாய்ப்பால் ெகாடுக்கவும் பாட்டிகள் ஊக்குவிக்க வேண்டும். அதேநேரத்தில் அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டு தானம் பெறும் பணிகளும் நடந்து வருகிறது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடப்பாண்டு இதுவரை 7ஆயிரத்து 135 தாய்மார்கள் தாமாக முன்வந்து தாய்ப்பாலை தானம் அளித்துள்ளனர். தாய்மார்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக 528லிட்டர் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது. இதனால் 2,962க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

The post சேலம் அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 528 லிட்டர் தாய்ப்பால் தானம்: விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Salem Government Hospital ,Salem ,Salem Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதாகி இறந்த...