×

கட்சி பதவிகளுக்கு கூட ஆள் பிடிக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே என விரக்தியில் இருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலை கட்சியின் உள்கட்சி தேர்தல் எல்லாம் எப்பிடி இருக்கு..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தில் இலை கட்சியின் கிளை கழக உட்கட்சி தேர்தல் 2 நாள் நடந்தது… பெயரளவில் தேர்தலை நடத்துமாறும், பொறுப்புகளில் இருந்து வருபவர்களுக்கே மீண்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு இறந்தவர்கள் மற்றும் வெளிநாடு சென்றவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிக்குமாறும் இலை கட்சி மேலிடம் உத்தரவிட்டதாம்… இதனால் மனுநீதி சோழன் மாவட்டத்தில் காஞ்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் முன்னிலையில் 20 ஒன்றியங்களின் கிளை கழக பொறுப்பாளர்கள், 4 நகராட்சி, 7 பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டு பிரதிநிதிகள் ஆகியோருக்கான தேர்தல் நடைபெற்றதாம்.. கடந்த 10 ஆண்டு ஆட்சியின் போது கூட்டுறவு சங்கம், வேளாண் துறையில் உள்ள முக்கிய பதவிகள் தனக்கு தான் வேண்டும் என கிளை கழக பொறுப்பாளர்கள் அடம் பிடித்து வாங்கி பதவி சுகத்தை அனுபவித்து வந்தனர்.. ஆனால் ஆட்சி மாற்றத்தால் எவ்வித பயனும் இல்லை… போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை கூட்டி செல்வதற்கு பல்வேறு வகைகளில் செலவுதான் கையை கடிக்கும்… இதனால் கிளைக்கழக, வார்டு கழக பொறுப்புகள் பதவி தங்களுக்கு வேண்டாம் என கூறி நிர்வாகிகள் ஒதுங்கிக் கொண்டார்களாம்… நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனுவுக்கு கூட ஆட்களை தேடியது போல் தற்போது கிளை கழக, வார்டு கழக பதவிகளுக்கும் கூட ஆட்களை தேடவேண்டிய நிலை இலைகட்சியில் ஏற்பட்டுள்ளதாம்… அதுவும் 3 முறை எம்எல்ஏவாக இருந்து வரும் தனது சொந்த தொகுதியில் கூட இதுபோன்ற நிலை இருந்து வருவதால் மாஜி அமைச்சர் கடும் விரக்தியில் இருந்து வருகிறாராம் என சொந்த கட்சிக்குள் அரசல் புரசலாக பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘போலி ரசீது போட்டு அசத்துதாமே போலீஸ்..’’ என்று சிரித்தார் பீட்டர் மாமா.  ‘‘ஆமா.. கோவை மாநகர காவல்துறையில், கிழக்கு பகுதியில் பணிபுரியும் 7க்கும் மேற்பட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர்களில் 4 பேர் அன்றாடம்  கரன்சி மழையில் குளிக்கின்றனர். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம்,  லாரி, டிப்பர், டிராக்டர் என எதையும் விடுவதில்லை. சோதனை என்ற பெயரில்  கரன்சியை கறந்து விடுகின்றனர். இதில், பெரிய வேடிக்கை என்னவென்றால், பல  நேரங்களில் போலி ரசீது போட்டுக்கொடுத்து அசத்தி விடுகின்றனர்.  இரவு  நேரங்களில் மது அருந்திவிட்டு யாரேனும் வாகனம் ஓட்டினால், அவர்களை  மடக்கிப்பிடித்து, ரூ.10 ஆயிரம் கோர்ட்டில் கட்டுறியா… அல்லது ரூ.3  ஆயிரம் எனது பாக்கெட்டில் போடுறியா… என வெளிப்படையாக கேட்டு, பணம்  வசூலிக்கின்றனர். இப்படி, மாதம்தோறும் பல லட்சும் குவித்துவிடுகின்றனர்.  குறிப்பாக, கோவை ராமநாதபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி,  காந்திபுரம் பகுதிகளில் வசூல் உச்சக்கட்டத்தில் உள்ளது. இதில், ராமநாதபுரம்  பகுதி நம்பர் 1 இடத்தில் உள்ளது. 4 பேரில், சந்திரன் பெயர் கொண்டவரும்,  ராஜ் பெயர் கொண்டவரும் அசைக்க முடியாத அளவுக்கு மாநகரில் வலம்  வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘மாங்கனி நகரில் போட்டியிட தயங்குறாங்களாமே நிர்வாகிகள்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகள்  வேட்பாளர்கள் தேர்தலில் தீவிரம் காட்டி வருகின்றனர். மாம்பழ கட்சியோ, இலை  கட்சியோடு கூட்டணியை முறித்துக் கொண்டிருப்பதால் தனித்து போட்டியிட  தயாராகியிருக்காம். ஏதோ ஒரு கட்சியோட கூட்டணியில் இருந்தாலாவது ஒன்னு,  ரெண்டு சீட்டை பிடிக்க முடியும், இப்ப தனியா விடுறாங்களேன்னு மாங்கனி மாநகர  உள்ளூர் மாம்பழ கட்சி முக்கிய நிர்வாகிகள் புலம்புறாங்களாம். அதுலேயும்,  தோற்றுப் போயிருவோம்னு மாநகர பொறுப்புகளில் இருக்கும் பலரும் வேட்பாளராக  களம் இறங்க தயங்கி, பதுங்குறாங்களாம். இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம்,  தொண்டர்கள் நிலையில் இருக்கும் கட்சியினர் போட்டிபோடும் உள்ளாட்சி தேர்தல்  வரும்போதெல்லாம், தலைமையில இருக்கிறவங்க தவிக்க விடுறாங்களேன்னும்  பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘சிசிடிவி கேமராவுக்கு வழங்கிய பணத்தை ஆட்டைய போட்டுட்டாங்களாமே இன்ஸ்கள்…’’ என இழுத்தார் பீட்டர் மாமா.  ‘‘உண்மைதான்.. வெயிலூர்  மாவட்டத்துல திருட்டு, வழிப்பறி குற்றங்கள் நெறைய  நடக்கிறதால நகரங்கள்,  பேரூர்கள், பெரிய கிராமங்கள் என்று எல்லா இடத்திலும்  மக்கள் கூடும்  மார்க்கெட் பகுதி மட்டுமில்லாம, முக்கியமான சாலைகளில்  குறிப்பிட்ட  இடைவெளியிலும், தெருக்கள் மற்றும் சந்திப்புகளில் சிசிடிவி  கேமராக்களை  சீருடைத்துறை பொருத்தியிருக்கிறது. இந்த கேமராக்களை  நன்கொடையாளர்கள்  மூலமாவே நிதி திரட்டி அதில் வாங்கி பொருத்தியிருக்கிறது  அந்த துறை.   இதுக்காக அந்தந்த 3 ஸ்டார் அதிகாரிகளை வைச்சு நன்கொடை  திரட்டப்பட்டது.  அப்படி நன்கொடை திரட்டிய பணத்தை பல அதிகாரிங்க ஆட்டைய  போட்டுட்டாங்களாம். குறிப்பாக வெயிலூர் மாநகரத்துக்கு வெளியில கணியான ஊர்ல  இருக்கிற ஸ்டேஷன்ல  ஏற்கனவே இருந்த 3 ஸ்டார் அல்லிமலர் பெண் அதிகாரி  மதுரையினு பேரு  இருக்கிற ஊர்லயும், கணியான ஊர்லயும் மட்டுமின்றி அவரது  எல்லைக்குள்ள எல்லா  இடங்களிலும் சிசிடிவி கேமராவுக்கு எஸ்பி பேரை சொல்லி  நன்கொடை வசூல்  பண்ணிட்டு, கேமராக்களை பொருத்தாம பணத்தை ஆட்டைய போட்டுட்டு  வேறு ஊருக்கு  மாறதலாகி போயிட்டாராம்.  நன்கொடை கொடுத்தவங்க, எங்கடா  நம்ம பகுதிக்கு  இன்னும் கேமரா வரலையே என்று ஸ்டேஷன்ல போயி கேட்ட பிறகுதான்  அந்தம்மாவோட  தகிடுதத்தம் தெரிய வந்துச்சாம்’’ என்றார் விக்கியானந்தா. …

The post கட்சி பதவிகளுக்கு கூட ஆள் பிடிக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே என விரக்தியில் இருக்கும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Leaf Party ,Peter ,Manuneethi ,Cholan District Leaf Party ,
× RELATED சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் எக்ஸ் பதிவு