திருச்சி: மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் திருச்சி என்ஐடியில் 9 பேர் குழுவிசாரணை நடத்தியது. திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) உள்ள ஒரு மகளிர் விடுதியில் கடந்த 29ம்தேதி இணையதள வசதியை ஏற்படுத்த கல்லூரி ஒப்பந்த ஊழியர் ராமநாதபுரம், முதுகுளத்தூரை சேர்ந்த கதிரேசன்(38) சென்றபோது விடுதி அறையில் தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றார். இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் கதிரேசனை கைது செய்தனர்.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்தும், விடுதி வார்டன்களின் பொறுப்பின்மையை கண்டித்தும் மாணவ, மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். திருச்சி எஸ்பி வருண்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, விடுதி வர்டன் மன்னிப்பு கேட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டம் குறித்து உண்மை நிலை கண்டறிய உயர் மட்ட குழு கல்லூரி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ள விசாரணை குழுத்தலைவரான மாணவர் நலன் டீன் கார்வேம்பு தலைமையில் 9 பேர் குழுவினர் நேற்று முதல் விசாரணையை தொடங்கினர்.
ஆக.29ம்தேதி நடந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றி குழுவினர் விவாதித்தனர். தொடர்ந்து விடுதி நிர்வாக குழு உறுப்பினர்கள், பணியில் இருந்த பெண் காவலர்கள், விடுதி வார்டன்கள், பணிப்பெண்கள், பாதிக்கப்பட்ட மாணவியிடமும் விசாரணை நடத்தினர். குழுவினர் கூறுகையில், பாதுகாப்பு குறைபாடு, அதிகாரிகளுக்கும், பணியில் இருந்த காவலர்களுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாதது, வார்டன்கள் பொறுப்பை பெரிதாக எடுத்து கொள்ளாதது, பாதிக்கப்பட்டவருடன் வார்டன்கள் நடந்துகொண்ட விதம் பற்றி விசாரணையில் தெரியவந்தது. பாலியல் துன்புறுத்தல் பற்றி விசாரணை முழுமையாக முடிந்த பிறகே நடவடிக்கை என்ன என்பது தெரியவரும் என்றனர்.
The post மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரம் திருச்சி என்ஐடியில் 9 பேர் குழு விசாரணை appeared first on Dinakaran.