×
Saravana Stores

என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: எந்த ஒரு நிறுவனத்தின் லாபம் அதிகரித்தாலும், அதன் பயன்கள் மனிதவளத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதிக லாபம் ஈட்டியுள்ள என்.எல்.சி நிறுவனம் அதன் தொழிலாளர்களுக்கு இயல்பாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளைக் கூட வழங்க மறுக்கிறது. என்.எல்.சி நிறுவனம் இந்த அளவுக்கு லாபம் ஈட்டுவதற்கு காரணமாகத் திகழும் அதன் தொழிலாளர்கள் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதற்குக் கூட என்.எல்.சி நிறுவனம் மறுத்து வருவது அடிப்படை மனித உரிமைகளுக்கும், தொழிலாளர் நல விதிகளுக்கும் எதிரானது ஆகும்.

என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தியும், மின்சார உற்பத்தியும் கணிசமாக அதிகரித்திருக்கும் நிலையில், அதே அளவுக்கு பணியாளர் எண்ணிக்கையும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, கிட்டத்தட்ட 5 ஆயிரம் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் 5000 பேரின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரமாக, அதாவது மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது. அதேநேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்திலிருந்து மும்மடங்குக்கும் கூடுதலாக அதிகரித்து 10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. ஒப்பந்தத் தொழிலாளராக பணியில் சேரும் ஒருவர் 15 ஆண்டுகளுக்கும் மேல் பணி செய்த பிறகு தான் இன்ட்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் சேர முடிகிறது.

அதன்பின் 10 ஆண்டுகள் பணி செய்தால் கூட அவர்களுக்கு பணி நிலைப்பு கிடைப்பதில்லை. அதனால், ஒப்பந்தத் தொழிலாளராக பணியில் சேரும் பலர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்தும் கூட ஒப்பந்தத் தொழிலாளராகவே ஓய்வு பெறும் அவலநிலை நிலவுகிறது. இந்த நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்காக ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் உடனடியாக இன்ட்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் சேர்க்க வேண்டும். இன்ட்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக பணி நிலைப்பு செய்ய என்.எல்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : N. L. C ,Ramadas ,Bamaka ,Chennai ,Palamaka ,Dinakaran ,
× RELATED என்எல்சி – ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை வழக்கு: ஐகோர்ட் உத்தரவு