×

பொத்தேரி பெரிய ஏரியில் கழிவுநீர் கொட்டிய லாரி சிறைபிடிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் வல்லாஞ்சேரி சாலைக்கு இடையே பொத்தேரி பெரிய ஏரி உள்ளது. சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, பொதுப்பணி துறைக்கு சொந்தமானது. இந்த ஏரியின் நீரை கிழக்கு மற்றும் மேற்கு பொத்தேரி, வல்லாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள 500க்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி ெபற்று வந்தன. கடந்த 30 ஆண்டுகளில் தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி, அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனை பிரிவுகள் உருவானதால், விவசாய நிலங்களுக்கு பாசனம் இல்லாமல் ஆனது. இதற்கிடையில், ஏரியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டதால், தற்போது ஏரியின் பரப்பளவு சுருங்கி 200க்கும் குறைவான ஏக்கர் மட்டுமே உள்ளது.மேலும், பொத்தேரி சுற்று வட்டார பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், லாரிகள் மூலம் ரயில்நகர், வல்லாஞ்சேரி சாலைக்கு இடையே பொத்தேரியில் உள்ள பெரிய ஏரியில் கொட்டப்படுகிறது. இதனால், ஏரியின் நீர் முழுவதுமாக மாசடைந்ததுடன், நிலத்தடி நீரும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீரில் குளிப்பதால் உடல்களில் அரிப்பு ஏற்பட்டு, பெரும்பாலான மக்களுக்கு  தோல் நோய் உருவாகிறது. இதுபற்றி மறைமலைநகர் நகராட்சி, பொதுப்பணி துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம், பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில், கழிவுநீரை எடுத்து கொண்டு ஒரு லாரி வந்தது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள், அந்த லாரியை மறித்து, கழிவுநீரை திரும்ப கொண்டு செல்லும்படி கூறினர். இதனால் டிரைவருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமுக்கள், லாரி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சமரசம் ேபசினர். பின்னர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், லாரியை பறிமுதல் செய்து, டிரைவரையும் காவல்நிலையம் கொண்டு சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்….

The post பொத்தேரி பெரிய ஏரியில் கழிவுநீர் கொட்டிய லாரி சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Potheri Periya lake ,Chengalpattu ,Vallanchery Road ,Chiramalainanagar Municipality ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...