×

கொம்பன்களின் ‘குஸ்தி’ உயிரிழப்பில் முடிந்தது; சக்கைக்கொம்பன் தாக்கி முறிவாலன் பரிதாபச்சாவு: மூணாறு அருகே சோகம்

மூணாறு: மூணாறு அருகே சக்கைக்கொம்பன் யானையுடன் நடந்த சண்டையில் படுகாயமடைந்த முறிவாலன் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல், பூப்பாறை மற்றும் சாந்தன்பாறை பகுதிகளில் சக்கைக்கொம்பன், முறிவாலன் ஆகிய இரண்டு ஆண் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இந்த இரண்டு யானைகளும் கடந்த 21ம் தேதி சின்னக்கானல் அருகே உள்ள வனப்பகுதியில் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் முறிவாலன் யானைக்கு இடது பின்னங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர்.

பின்னர் மீண்டும் 29ம் தேதியும் யானைகள் இரண்டும் மோதிக்கொண்டன. இதில் முதுகுத்தண்டு உள்பட 15 இடங்களில் பலத்த காயமடைந்த முறிவாலன் யானை நடக்கமுடியாமல் கவலைக்கிடமான நிலையில் இருந்தது. காயமடைந்த யானைக்கு வனவிலங்கு கால்நடை மருத்துவர் அருண்ராஜ் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று காலை முறிவாலன் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தேவிகுளம் வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், ‘‘முதுகுத்தண்டுக்கு அருகில் ஏற்பட்ட ஆழமான காயம் மற்றும் அதிக ரத்தப்போக்கு காரணமாக யானை உயிரிழந்தது. இந்த இரு யானைகளும் அடிக்கடி ஒன்றையொன்று தாக்கிக் கொள்ளும் சுபாவம் உடையவை’’ என்றனர்.

மிரட்டும் ஒற்றைக்கொம்பன்: மூணாறு அருகே நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் ஒற்றைக்கொம்பன் யானை நடமாடுகிறது. இதனால் பகல் நேரங்களில் கூட வெளியில் நடமாடுவதை தொழிலாளர்கள் தவிர்த்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் காட்டுமாடு உள்பட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post கொம்பன்களின் ‘குஸ்தி’ உயிரிழப்பில் முடிந்தது; சக்கைக்கொம்பன் தாக்கி முறிவாலன் பரிதாபச்சாவு: மூணாறு அருகே சோகம் appeared first on Dinakaran.

Tags : Chakaikompan ,Sunaru ,Munaru ,Muriwalan ,Sinnakanal ,Pupara ,Sandanpara ,Kerala State ,Idukki District ,Kompans' ,Miriwalan ,Dinakaran ,
× RELATED மூணாறு அருகே விளைநிலங்களில் புகுந்து படையப்பா அட்டகாசம்