×

புரசைவாக்கம்- கெல்லீஸ் வரையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடக்கம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை: புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும் பணி இந்த மாதம் தொடங்கவிருப்பதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2015ம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம்-விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது, ரூ.63,246 கோடி மதிப்பில் 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 44.6 கிலோ மீட்டர் தூரத்துக்கும் புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.

இதில், மாதவரம் சிறுசேரி சிப்காட் வரையிலான 3வது வழித்தடத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி பணிமனை வரையிலான 4வது வழித்தடத்தில் 18 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைய உள்ளன. 3வது வழித்தடத்தில், மாதவரம் பால்பண்ணை-கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம், 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி இந்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: புரசைவாக்கத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சுரங்கப்பாதை தோண்டும் பணி இந்த மாதம் தொடங்க உள்ளது. புரசைவாக்கம் பகுதியில் மக்கள் அதிகம் வாழும் பகுதியாகவும் கடைகள் அதிகமாக இருப்பதால் மிகவும் கவனத்துடன் பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறோம். சுரங்கம் தோண்டும் இடத்தில் மணல்தன்மை எளிதில் இருப்பதால் பணிகள் முடிப்பதில் எந்த ஒரு சிரமமும் இருக்காது. புரசைவாக்கத்தில் இருந்து கெல்லீஸ் நோக்கி 300 மீட்டர் சுரங்கப்பாதை 6 மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பெரம்பூர் பேரக்ஸ் சாலை முதல் புரசைவாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணியும் தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

The post புரசைவாக்கம்- கெல்லீஸ் வரையிலான சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடக்கம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Purasaivakam- Kelleys ,Metro Rail Administration ,CHENNAI ,Purasaivakam ,Kelleys ,Metro Rail ,Chennai Airport ,VIMCO Nagar, Central ,Purasaivakkam-Kellys ,Dinakaran ,
× RELATED சென்னை மழைநீர் வடிகால் பணி:...