×
Saravana Stores

குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதி ஏற்படுத்தி தர பயணிகள் கோரிக்கை

ஊட்டி: குன்னூர் பேருந்து நிலையத்தில் இருக்கை வசதி இல்லாத நிலையில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு கிராமங்களில் இருந்தும்,வெளியூர்களில் இருந்தும் குன்னூருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இங்கு பேருந்துகள் நிறுத்துவதற்காக கடந்த 70 ஆண்டுக்கு முன் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தின் உட்புறத்தில், பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு ஒரு இருக்கைகள் கூட இல்லாததால் முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள்,பள்ளி குழந்தைகள் என பலர் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பேருந்து நிலையத்திற்கு முன்புறம் உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், உயர்நீதிமன்ற உத்தரவின்படி சமீபத்தில் இடிக்கப்பட்டது. இருப்பினும் இடிக்கப்பட்ட கட்டிடங்கள் நீண்ட நாட்கள் ஆகியும் அகற்றப்படாமல் உள்ளது. பேருந்து நிலையத்தில் இருக்கைகள் இல்லாததாலும் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் ஆபத்தை உணராமல் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் மீது அமர்ந்து பேருந்திற்காக காத்திருக்கின்றனர்.

எனவே, இடிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்றி அப்பகுதி விபத்துக்களை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யும் வரை தற்காலிகமாக பயணிகள் அமருவதற்கு அங்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என குன்னூர் நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post குன்னூர் பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதி ஏற்படுத்தி தர பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Coonoor Bus Station ,Dinakaran ,
× RELATED குன்னூரில் 3-ம் தேதி அபாய எச்சரிக்கை அளவை விட அதிக வெள்ளப்பெருக்கு