- Bandalur
- கூடலூர் அரசு போக்குவரத்து கழகம்
- காரியச்சோலை
- நீலகிரி மாவட்டம்
- நாடுகனி
- Dewala
- கூடலூர்
- தின மலர்
பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கரியசோலைக்கு கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் இருந்து தினமும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு கூடலூரில் இருந்து நாடுகாணி, தேவாலா வழியாக சென்ற கடைசி பஸ் இரவு 9.15 மணிக்கு கரியசோலையை சென்றடைந்தது. டிரைவர் பிரசன்னகுமார் மற்றும் கண்டக்டர் நாகேந்திரன் ஆகியோர் பஸ்சை நிறுத்திவிட்டு அருகே உள்ள தங்கும் அறைக்கு சென்றனர்.
இரவு தூங்கி எழுந்து நேற்று காலை 6 மணிக்கு பஸ்சை எடுக்க வந்தபோது, பஸ் மாயமாகியிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் அப்பகுதி முழுவதும் தேடியபோது, சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ தேவாலா சரகம் 4 பகுதியில் சாலையோரம் பஸ் நிற்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நெலாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கரியசோலை பஸ் ஸ்டாண்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தில் பிடித்து விசாரித்ததில், அரசு பஸ்சை கடத்தியது அவர் தான் என்பது தெரிய வந்தது.
அவர் தேவாலா வாழவயல் பகுதியை சேர்ந்த ரிஷால் (19) என்பதும், கஞ்சா போதையில் அரசு பஸ்சை கடத்தியதும் தெரிய வந்தது. நேற்று முன்தினம் தேவாலா அட்டிப்பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது பைக் கரியசோலை பகுதியில் சாவியுடன் நிற்கவே, அதனையும் திருடி சிறிது தூரம் ஓட்டி சென்ற அவர், சாலையோரமாக பைக்கை நிறுத்தி விட்டு, பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்த அரசு பஸ்சை எடுத்து சென்றுள்ளார்.
ஒரு வளைவில் திரும்பிய போது சாலையோர திட்டில் பஸ் இடித்து விபத்துக்குள்ளானது. அங்கேயே பஸ்சை நிறுத்திவிட்டு மீண்டும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து படுத்து தூங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக நெலாக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து ரிஷாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா போதையில் பைக், அரசு பஸ்சை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் பந்தலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post ‘போர் அடிச்சுது… பஸ்ச கடத்தி ஓட்டி பார்த்தேன்…’ சாவியுடன் நின்ற பைக்கையும் விட்டு வைக்காத போதை வாலிபர் appeared first on Dinakaran.