×

பெண்களுக்கு எதிரான வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்: நீதித்துறை மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் என்று டெல்லியில் நடந்த மாவட்ட நீதித்துறை தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்.

இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் மாவட்ட நீதித்துறையை சேர்ந்த சுமார் 800 பேர் கலந்து கொண்டுள்ளனர். முதல் நாளான நேற்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியர்கள் ஒருபோதும் இந்திய நீதித்துறை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மீது சந்தேகம் எழுப்பியது கிடையாது.

அரசின் நிறுவனங்களின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உச்ச நீதிமன்றம் நிலை நிறுத்தி உள்ளது.இருண்ட காலமான அவசர காலத்தில் (எமர்ஜென்சி) கூட தேச நலனுக்காக உச்ச நீதிமன்றம் எப்போதும் செயல்பட்டு தேசிய ஒருமைப்பாட்டை காப்பாற்றி எடுத்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கருத்துகளை மையமாகக் கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2019ம் ஆண்டு விரைவு நீதிமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து அதன் கீழ் சாட்சி பதிவு மையங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அந்த குழுக்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அந்த குழுக்களை மேலும் வலுப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பெண்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் விரைவாக தீர்ப்புகள் வழங்கப்பட்டால், அது நீதி வழங்கும் செயல்முறையைப் கண்டிப்பாக பாதுகாக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* முக்கிய வழக்குகளில் ஜாமீன் வழங்க அச்சம்; கபில்சிபல்
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கபில் சிபல் பேசும் போது,’ விசாரணை நீதிமன்றம், செசன்ஸ் நீதிமன்றங்கள் எந்த அச்சமின்றி நீதி வழங்கும் வகையில் அவற்றுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக நீதித்துறையின் முதுகெலும்பாக திகழும் இந்த நீதிமன்றங்களுக்கு, தாங்கள் வழங்கும் தீர்ப்பால் அவர்களுக்கு எந்தவித பாதகமும் வந்துவிடக் கூடாது என்ற நம்பிக்கையை மாவட்ட அளவிலான நீதித்துறைக்கு ஏற்படுத்த வேண்டும் . ஏனெனில் விசாரணை நீதிமன்றங்கள், செசன்ஸ் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களை பொறுத்தவரை சில முக்கிய வழக்குகளில் ஜாமின் வழங்க அஞ்சி வெறுக்கின்றன. இது ஒருவித அழுத்தம் ஆகும்’ என்றார்.

* தாய்மொழியில் வாதாடலாம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:
நீதித்துறையில் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் மாற்றங்கள் என்பது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்திருக்கிறது. 2023-24ம் ஆண்டில் சுமார் 46.48 கோடி பக்கங்களில் நீதிமன்றங்களின் பதிவுகள் முழுமையாக டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. நாட்டில் உள்ள 714 மாவட்ட நீதிமன்றங்களும் இந்த டிஜிட்டல் தளத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே மாவட்ட நீதித்துறைகளில் பெண்கள் பங்களிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது சட்டத்துறை சார்ந்த படிப்புகளில் பிராந்திய மொழிகள் பயன்படுத்தப் படுகின்றது. இதனால் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் தங்களது சொந்த தாய் மொழியிலேயே திறமையாக வாதாட முடியும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post பெண்களுக்கு எதிரான வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்: நீதித்துறை மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Judiciary Conference ,New Delhi ,Modi ,National ,Conference of District Judiciary ,Delhi ,Narendra Modi ,National Conference of District Judiciary ,Supreme Court ,Judicial Conference ,Dinakaran ,
× RELATED என் அம்மா உயிருடன் இருந்தவரை என்...