×
Saravana Stores

மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் அயனாவரம் – ஓட்டேரி இடையே மெட்ரோ சுரங்க பணிகள் நிறைவு

சென்னை: மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் அயனாவரம் – ஓட்டேரி இடையே மெட்ரோ சுரங்க பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல், சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது, ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.

இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 44.6 கிலோ மீட்டர் தூரத்துக்கும் புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. இதில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3வது வழித்தடத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை வரையிலான 4வது வழித்தடத்தில் 18 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைய உள்ளன. 3வது வழித்தடத்தில், மாதவரம் பால்பண்ணை – கெல்லீஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம், 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வழித்தடத்தில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொல்லி, கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி அயனாவரம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 903 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு, கடந்த 29ம் தேதி ஓட்டேரி நிலையத்தை வந்தடைந்தது. டி.யூ -1 ஒப்பந்தத்தின் கீழ், டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தால் இதுவரை 6 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் தனது பணியை நிறைவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பணியை நிறைவு செய்துள்ளது. அயனாவரம் – ஓட்டேரி இடையிலான சுரங்கப்பாதை பிரிவு, மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாகும், இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொல்லியின் முதல் 500 மீட்டர் சுரங்கப்பாதை இயக்கம் கூர்மையான 220 மீட்டர் ஆரம் வளைவுடனும், கடைசி 200 மீட்டர் சுரங்கப்பாதை இயக்கம் 280 மீட்டர் ஆரம் வளைவுகளுடன் பணியை தற்போது நிறைவு செய்துள்ளது.

மேலும், இந்த சுரங்கப்பாதை இயக்கமானது, மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளை கடந்து செல்வது போன்ற பெரும் சவால்களையும், 100க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை எதிர்கொண்டும், மக்களுக்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்துள்ளது. இதனை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், கூடுதல் பொது மேலாளர் கொல்லி வெங்கட ரமணா (சுரங்கப்பாதை கட்டுமானம்), டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் அல்பர் வாஹித்யில்டிஸ், நிறுவன தலைமை பொறியாளர் நாயுடு மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

The post மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் அயனாவரம் – ஓட்டேரி இடையே மெட்ரோ சுரங்க பணிகள் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Ayanavaram – ,Otteri ,Madhavaram – ,Sirusheri route ,CHENNAI ,Ayanavaram ,Metro Rail ,Madhavaram – Sirusheri route ,Dinakaran ,
× RELATED வேலூரில் இருந்து ஓட்டேரி வழியாக...