- வட கிழக்கு பருவமழை
- பிரதம செயலாளர்
- என்.முருகானந்தம்
- வட சென்னை
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- என். முருகனந்தம்
- தமிழ்
- தமிழ்நாடு
- நா. முருகானந்தம்
- வட கிழக்கு பருவமழை
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகிய துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நீர்நிலை புனரமைப்புப் பணிகள் குறித்து குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் இராயபுரம் மண்டலம், வார்டு-61, பூந்தமல்லி பிரதான சாலை, காந்தி இர்வின் பாலம் இரயில்வே பாதையின் அருகில் ரூ.5.20 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அணுகு கால்வாய் மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு, பணிகளை விரைவாக மேற்கொண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியினைப் பார்வையிட்டு, மாணவர்கள் சேர்க்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, அப்பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டு, பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-77க்குட்பட்ட டெமல்லஸ் சாலையில் ரூ.17.57 கோடி மதிப்பில் பக்கிங்ஹாம் கால்வாய்க்கு மழைநீர் வெளியேற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள நீரேற்று அறை மற்றும் இதர கட்டமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, முனுசாமி கால்வாயிலிருந்து நீரேற்று நிலையத்தின் வாயிலாக பக்கிங்ஹாம் கால்வாயில் நீர் வெளியேற்றும் செயல்பாடுகளை கேட்டறிந்தார். மேலும், மழைக்காலங்களில் இதன் செயல்பாடுகளை கண்காணித்து மழைநீர் தேங்காமல் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
பின்னர், வார்டு-73க்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலை மழைநீர் வடிகால் அமைப்புடன் ஒருங்கிணைத்து, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரூ.2.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மழைநீர் வெளியேற்றும் தொட்டியின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காதவாறு மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்கள், வார்டு-45 மற்றும் 71க்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையின் மேல் ரூ.226.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரயில்வே மேம்பாலப் பணியினைப் பார்வையிட்டு, இரயில் பாதைகளின் குறுக்கே தள்ளி நகர்த்தும் (Push Through) முறையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டு, இப்பாலத்தின் பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் முடித்திடவும், மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னர் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ச்சியாக, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-67, 68 மற்றும் 69க்குட்பட்ட கொசஸ்தலையாற்றின் ரெட்டேரி, தெற்கு உபரிநீர்ப்பிடிப்பில் ரூ.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளில், பேப்பர் மில்ஸ் சாலையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினைப் பார்வையிட்டு, இப்பணிகளை 15 நாட்களுக்குள் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், நீர்வள ஆதாரத் துறை சார்பில் அயனாவரம் மற்றும் மாதவரம் வட்டத்தில் அமைந்துள்ள 3,050 மீட்டர் நீளம் கொண்ட தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயில் ரூ.91.36 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியினைப் பார்வையிட்டு, இப்பணிகளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இப்பணிகளை முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடந்த பருவமழையின்போது தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாய் அமைந்துள்ள பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 9.11.2021 அன்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, வெள்ள பாதிப்புகளை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து, பருவமழைக் காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 91.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தணிகாசலம் நகர் உபரிநீர் கால்வாயினை திறந்தவெளி கால்வாய் மற்றும் மூடிய வடிவிலான கால்வாயாக மேம்படுத்தும் பணியினை முதலமைச்சர் 30.08.2023 அன்று தொடங்கிவைத்தார்.
இதன்மூலம் தணிகாசலம் நகர் கால்வாயினை அகலப்படுத்தி கூடுதலாக உபரிநீர் செல்லும் வகையில் வழிவகை செய்யப்படவுள்ளது. 700 மீட்டர் நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்திற்கு கான்கிரீட் கால்வாயாகவும். 780 மீட்டர் நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்தில் திறந்தவெளியாகவும், 4 மீட்டர் அகலத்தில் மூடிய வடிவத்திலும், 1010 மீட்டர் நீளத்திற்கு 6 மீட்டர் அகலத்தில் திறந்தவெளியாகவும், 4 மீட்டர் அகலத்தில் மூடிய வடிவிலும், 220 மீட்டர் நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்தில் மூடிய வடிவிலான கால்வாயாகவும், 160 மீட்டர் நீளத்திற்கு 6 மீட்டர் அகலத்தில் திறந்தவெளி கால்வாயாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலம், வீனஸ் நகர் மற்றும் டெம்பிள் ஸ்கூல் பகுதிகளில் மழைநீர் தேங்காவண்ணம் ரூ.2.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மழைநீர் வெளியேற்றும் நிலையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளைப் பார்வையிட்டு, மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற்றும் மோட்டார் பம்புகள் தொடர்ந்து இயக்கப்பட்டு நீர் தேங்காமல் வெளியேற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஒவ்வொரு மழைநீர் வெளியேற்று நிலையமும் தலா 1.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு மழைநீனை தேக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீரை அகற்ற ஒவ்வொரு தொட்டியிலும் 100 குதிரைத்திறன் கொண்ட இரண்டு நீர்மூழ்கி மோட்டார்கள் பொருத்தப்பட்டு மோட்டார் அறைகள் கட்டப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக, ரெட்டேரியினைப் பார்வையிட்டு, அதன் உபரிநீர் தணிகாசலம் கால்வாயில் செல்லும் பகுதியினைப் பார்வையிட்டு, ரெட்டேரியில் தூர்வாரும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் ஏரியில் ரூ.40 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்கா அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு, ஏரியைச் சுற்றியுள்ள காலியிடங்களில் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுப்புறத்தை மேலும் பசுமையாக்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின் போது, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., வட்டார துணை ஆணையாளர்கள் கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு), கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., (மத்தியம்) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post வடகிழக்குப் பருவமழை.. வடசென்னைக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம்!! appeared first on Dinakaran.