×

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து இலங்கை கடற்படை மீட்ட 2 மீனவர்கள் சென்னை திரும்பினர்: அதிகாரிகள் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, கடந்த 26ம் தேதி டால்வின்ராஜ் (45) என்பவர்க்கு சொந்தமான விசைப்படகில் சுரேஷ் (49), வெள்ளைச்சாமி என்கிற முனியாண்டி (55), எமரிட் (49) ஆகியோர் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். கடந்த 26ம் தேதி நள்ளிரவில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென படகின் பக்கவாட்டில் பலகை உடைந்து, படகு கடலில் மூழ்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் குதித்து கச்சத்தீவை நோக்கி, நீந்திச் சென்று உள்ளனர்.

இதில் டால்வின் ராஜ், சுரேஷ் ஆகிய இருவரையும் இலங்கை கடற்படையினர் மீட்டு, முதலுதவி அளித்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட இந்த இருவரும், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் உதவியுடன், எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் கொடுக்கப்பட்டு, இலங்கையில் இருந்து விமானம் மூலம், சென்னை அழைத்து வரப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், அந்த இரு மீனவர்களையும் வரவேற்று, உணவுகள் கொடுத்து, அவர்களின் சொந்த ஊருக்கு, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த கார் மூலம் அனுப்பி வைத்தனர். இதனிடையே கடலில் மூழ்கி மாயமான மற்ற இரு மீனவர்களான சுரேஷ், வெள்ளைச்சாமி என்கிற முனியாண்டி ஆகிய இருவரும் உயிரிழந்ததாக தெரியவந்தவுடன், அவர்களின் உடல்களை இலங்கை கடற்படை உதவியுடன் மீனவர்கள் தேடி மீட்டு, சொந்த ஊரான ராமேஸ்வரம் கொண்டு சென்றனர்.

The post கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து இலங்கை கடற்படை மீட்ட 2 மீனவர்கள் சென்னை திரும்பினர்: அதிகாரிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Kachchathivu ,Chennai ,Suresh ,Villichami ,Muniandi ,Emerit ,Rameswaram ,Tamil Nadu ,Dalvinraj ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: ஒன்றிய...