- முதல் இரவு தெரு கார் பந்தயம்
- சென்னை
- தென் ஆசியா
- அமைச்சர்
- உதயநிதி
- விளையாட்டு அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- இந்தியன் ரேசிங் லீக்' இரவு தெரு கார் பந்தயம்
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: தெற்காசியாவிலேயே முதல் முறையாக ‘இந்தியன் ரேசிங் லீக்’ இரவு நேர தெரு கார் பந்தயப் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். மு.க.ஸ்டாலின் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ் நாட்டில் சர்வதேச போட்டிகள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. அதன் தொடர்ச்சியாக 2023ம் ஆண்டு டிசம்பரில் இரவு நேர தெரு கார் பந்தயப் போட்டியை நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) திட்டமிட்டிருந்தது.
அதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்பிபிஎல் என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு எஸ்டிஏடி ஒப்பந்தம் செய்திருந்தது. புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அந்தப் போட்டி, இன்றும் நாளையும் சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள ராஜாஜி சாலை, நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, கொடிமர இல்ல சாலை என தீவுத்திடலைச் சுற்றிலும் 3.5 கிமீ நீளத்துக்கு நடைபெற உள்ளது. இதில் 19 சாலைத் திருப்பங்கள் உள்ளன. இந்தியாவில் பார்முலா-4 இரவு நேர தெரு கார் பந்தயம் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
உலக அளவில் இந்த பந்தயத்தை நடத்தும் 15வது நகரம் என்ற பெருமை சென்னைக்கு கிடைத்துள்ளது. இதில் சென்னை உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளின் சார்பில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி போட்டி நடத்தப்படும். பந்தயம் நடைபெறும் சாலைகளின் இரு புறமும் கான்கிரீட் மற்றும் இரும்பு தடுப்புகள் பொறுத்தப்பட்டுள்ளன.
போட்டி இரவில் நடப்பதால் அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி போட்டியைக் காண சிவானந்தா சாலை, மன்றோ சிலை , தீவுத்திடல் ஆகிய இடங்களில் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பயிற்சி சுற்றுகளுடன் போட்டி நடக்கும்.
மாலை 5.50க்கு பார்வையாளர்களை மகிழ்விக்க பொழுதுபோக்கு சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து பந்தயத்தின் முக்கிய பகுதியான தகுதிச் சுற்று 4 பிரிவுகளாக இரவு 7.10 முதல் இரவு 9 மணி வரை நடத்தப்படும். 2வது நாளான நாளையும் பந்தயங்கள் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். இடையில் மாலை 6.45 மணிக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக சாகசங்கள் நிகழ்த்திக் காட்டப்படும். பின்னர் முதன்மை சுற்றான கார் பந்தயம் நடைபெறும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளுடன் ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது.
* வெற்றிப் புள்ளிகள்
பந்தயம் மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெறும். ஒவவொரு சுற்றிலும் 1 முதல் 10 இடங்களை பிடிக்கும் ஓட்டுநர் அல்லது அணிக்கு முறையே 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 புள்ளி அளிக்கப்படும்.
* டிக்கெட் விற்பனை
பந்தயத்தை பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை ‘பே டிஎம்’ இணையதளம் மூலமாக போட்டி தொடங்கும் முன்பு வரை வாங்கலாம். நேற்று நண்பகல் 75% டிக்கெட் விற்பனையாகி இருப்பதாக ஆர்பிபிஎல் தலைர் அகிலேஷ் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.
* இலவச அனுமதி
‘முதல் முறையாக நடப்பதால் கார் பந்தயத்தை காண ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த இலவச அனுமதியை பெற ‘பே டிஎம்’ இணையதளத்தில் பதிவு செய்து இலவச டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் 1000 பேருக்கு மட்டுமே முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று ஆர்பிபிஎல் நிர்வாகிகள் கூறினர்.
* பெண் ஓட்டுநர்கள்
ஒவ்வொரு அணியிலும் ஒரு பெண் ஓட்டுநர் உட்பட 4 ஓட்டுநர்கள் இடம் பெற்றிருப்பார்கள். மொத்தம் 6 பெண் டிரைவைர்கள் உட்பட 24 டிரைவர்கள் களம் காண உள்ளனர். இந்த 6 அணிகளில் ஒருவர் செயற்கைகால்களை கொண்ட மாற்றுத்திறனாளி ஆவார்.
* பந்தயக் கார்கள்
ஒவ்வொரு அணிக்கும் 2 பந்தயக் கார்கள் என மொத்தம் 12 மைகேல் எப்4 ஜெனரல், வுல்ப் தண்டர் ஜிபி08 வகை கார்கள் பந்தயத்தில் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த கார்கள் முறையே மணிக்கு 210 மற்றும் 240 கி.மீ. வேகத்தில் செல்லும்
பணிமனைகள்
* ஒவ்வொரு சுற்று முடிவிலும் காரின் தன்மையை பரிசோதிக்க, பழுது நீக்க ஒவ்வொரு அணிக்கும் தனித்தனியே தீவுத்திடலில் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* சென்னை அணியில் உள்ளூர் வீரர்கள் சந்தீப்குமார் அம்பலவாணன், முகமது ரியான் ஆகியோருடன் ஜான் லன்காஸ்டர் (பிரிட்டன்), எமிலி டுக்கான் (ஆஸ்திரேலியா) இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு வீரரான கேல் ஆதித்யாகுமரன் இந்தப் போட்டியில் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ளார்.
The post தெற்காசியாவிலேயே முதல் முறையாக நடைபெறுகிறது சென்னையில் இன்று இரவு நேர ஸ்டிரீட் கார் ரேஸ்: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.