*வணிகர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம் : சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க கோரி சங்கராபுரம் அருகே வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டில் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூங்கில்துறைப்பட்டு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தர்பார் தலைமை தாங்கினார்.
மாநில இணை செயலாளர் வாசன் மாவட்டத் துணைத் தலைவர் சிவக்குமார், தொகுதி செயலாளர் ஜெயபால்பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வணிகர்கள் காலை 6 மணி முதல் கடையை பூட்டி கருப்பு கொடியுடன் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி 4 வழிச்சாலை விரிவாக்க பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருவதாலும், அவ்வப்போது சாலை அமைக்கும் பணி நிறுத்தப்படுவதாலும் கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவ,மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். நான்கு வழி சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணியை தொடங்க இருப்பதால் கரும்பு வாகனங்கள் அதிக அளவில் வருவதால் போக்குவரத்து அதிக அளவில் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே உடனடியாக பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிவசுப்பிரமணியம்,சர்மா, திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு குகன், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், கிராம நிர்வாக அலுவலர் முருகன், மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவன்யா ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க கோரி சங்கராபுரம் அருகே கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.