×
Saravana Stores

தொழிற்சாலைகளுக்கு ‘பீக் ஹவர்’ மின்கட்டண பிரச்னைக்கு முதல்வருடன் கலந்து பேசி தீர்வு

*கோவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

கோவை : தொழிற்சாலைகளுக்கு ‘பீக் ஹவர்’ மின்கட்டண பிரச்னை குறித்து முதல்வருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும் என கோவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
கோவை கொடிசியாவில் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்குதல், உலக முதலீட்டாளர் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட எம்எஸ்எம்இ நிறுவனத்தினருடன் கலந்தாய்வு கூட்டம் மற்றும் சேலம், கோவை மண்டலங்களின் மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், சிட்கோ கிளை மேலாளர்கள், சேகோசர்வ், இண்ட்கோசர்வ் அலுவலர்களுடன் திறனாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை மண்டலத்தில் 46 தொழில் முனைவோருக்கு ரூ.6.55 கோடி மானியத்துடன், ரூ.30.81 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரியில் தமிழக முதல்வர் தலைமையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில், ரூ.63,573 கோடிக்கு முதலீடு பெறப்பட்டு 2 லட்சத்து 51 ஆயிரத்து 60 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 5,068 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த 8 மாதத்தில் 1,645 நிறுவனங்கள் ரூ.16 ஆயிரத்து 613 கோடியில் உற்பத்தி துவங்கி உள்ளது. இதில், 60,436 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

தொழில் துவங்காத மீதமுள்ளவர்கள், கூட்டத்திற்கு அழைத்து ஏன் தொழில் தொடங்கவில்லை, தொழில் அனுமதி பெற உள்ள சிக்கல், துறை சார்ந்த காலதாமதம் குறித்து பேசி தொழில் தொடங்காமல் உள்ளவர்கள் தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மண்டல அளவில் கூட்டங்களை நடத்தி வருகிறோம். குறிப்பிட்ட காலத்தில் ஒப்பந்தம் முடிவதற்குள் தொழில் துவங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 5 வகையான தொழில் திட்டங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கடந்த மூன்றரை வருடங்களில் ரூ.961.58 கோடி மானியத்துடன், ரூ.2,615.30 வங்கி கடன் 30,326 தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டு 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளது.

295 கோடி மதிப்பில் 512 ஏக்கரில் 8 தொழிற்பேட்டை துவங்கப்பட்டு உள்ளது. தவிர, 7 மாவட்டத்தில் 248.1 ஏக்கரில் 115.54 கோடி மதிப்பில் 8 தொழிற்பேட்டை உருவாக்கி வருகிறோம்.‌ மேலும், 283.40 ஏக்கரில் ரூ.115.64 கோடி மதிப்பில் 10 தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மூன்றே கால் ஆண்டு ஆட்சியில் 26 தொழிற்பேட்டை துவங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் சமச்சீரான தொழிற் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும். அதிக தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம்.

மற்ற மாநிலங்களில்விட மின் கட்டணம் தமிழ்நாட்டில் குறைவுதான். ஏற்கனவே, கடந்த ஆட்சியில் உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால்தான் மின் கட்டணம் உயர்ந்து உள்ளது. இதற்கு நாங்கள் காரணம் இல்லை. கடந்த ஆட்சியாளர்கள்தான் காரணம். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி பிரச்னைக்கு நாங்கள் காரணம் இல்லை. அது யார் என்று உங்களுக்கே தெரியும். உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு அதிகளவில் கடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பணம் தரவில்லை. புதிய கல்வி கொள்கை திட்டத்துக்கு ரூ.500 கோடி பணம் தரவேண்டும் அதுவும் தரவில்லை.

திமுக அரசு என்றால் ஒன்றிய அரசு ஒரு மாதிரி நடந்து கொள்கின்றனர். தொழிற்சாலைகளுக்கு ‘பீக் ஹவர்’ மின்கட்டண பிரச்னைகளுக்கு முதல்வருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும். தொழில் துறையினருக்கு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் நியமித்து கடன் பெறுதல் சிக்கல்களை எளிமைப்படுத்தி உள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மின் கட்டணம் பிரச்சினையில் சிறு, குறு தொழிலாளிகள் நஷ்டத்தை நாங்கள் ஏற்று ரூ.650 கோடி பணம் செலுத்தி உள்ளோம். பீக் ஹவர்களில் மீட்டர் போட கூடாது என கூறியுள்ளோம். அனைத்து பிரச்சினை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினர்.

The post தொழிற்சாலைகளுக்கு ‘பீக் ஹவர்’ மின்கட்டண பிரச்னைக்கு முதல்வருடன் கலந்து பேசி தீர்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,D.Mo.Anparasan ,Coimbatore Coimbatore ,Coimbatore ,
× RELATED பட்டாசு ஆலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு