லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் 9 பேரை கொன்ற ஆட்கொல்லி ஓநாய்களால் இரவு முழுவதும் 30 கிராம மக்கள் கம்புகளுடன் காவல் காத்து வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் பஹரேஜ் மாவட்டத்தில் இரவில் நுழையும் ஓநாய் கூட்டம் தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை வாயில் கவ்வி கொண்டு காட்டு பகுதிக்குள் சென்று விடுகிறது. கடந்த 45 நாட்களில் 8 குழந்தைகள் 1 பெண் உட்பட 9 பேரை ஓநாய்கள் கடித்து கொன்றுள்ளது.
இதனால் 30 கிராம மக்கள் இரவில் தூங்காமல் பரிதவித்து வருகின்றனர். வனத்துறையை நம்பாத கிராம மக்கள் இரவு நேரங்களில் கம்புகளுடன் காவல் காக்க தொடங்கிவிட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் கம்புகளுடன் டார்ச் லைட் வைத்து கொண்டு காவலில் ஈடுபடுகின்றனர். மேலும் தட்டுகளில் சத்தம் எழுப்பியும் அவர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
இதில் ஒருசிலர் ரேடியோக்களை ஒலிக்க விட்டும், ரோந்து பணியில் ஈடுபட்டும் வருகின்றனர். இரவில் தூங்கிய பிறகு ஓநாய்கள் எந்த திசையில் இருந்து வருகிறது என்று தெரியவில்லை என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். டிரோன்கள் மூலம் ஓநாய்களின் நடமாட்டத்தை கண்டுபிடிக்கும் வனத்துறையினர் இதுவரை 4 ஓநாய்களை கூண்டு வைத்து பிடித்துள்ளனர். மீதமுள்ள 2 ஓநாய்களை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளதாகவும், கிராம மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
The post உத்திரப்பிரதேசத்தில் 9 பேரை கொன்ற ஆட்கொல்லி ஓநாய்கள்: இரவு முழுவதும் கம்புகளுடன் காவல் காக்கும் மக்கள் appeared first on Dinakaran.