ஊட்டி: எடப்பள்ளியில் ரூ.10.95 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் திறந்து வைத்தார். எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.10.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார்.
சுற்றுாலத்துறை அமைச்சர் ராமசந்திரன் தலைமை வகித்து, ரூ.10.95 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கினை திறந்து வைத்தார். தொடர்ந்து, குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மாவட்டத்திலுள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு அதனுடைய இருப்பிடத்திற்கு சென்று சிகிச்சை அளிக்க மற்றும் செயற்கை முறை கருவூட்டல் பணி, தடுப்பூசி பணிகள் மற்றும் குடற்புழு நீக்கும் பணி போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கிட நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை வழங்கும் பொருட்டு, அதன் சாவியினை கால்நடை பராமரிப்புத்துறை ஓட்டுநரிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குன்னூர் நகர மன்ற துணைத்தலைவர் வசீம்ராஜா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சுரேஷ்கண்ணன், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் சுனிதாநேரு, திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி, குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், சுப்ரமணி, எடப்பள்ளி ஊராட்சித்தலைவர் முருகன், புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மார்கிரேட் ஆரோக்கியமேரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post ரூ.10.95 லட்சத்தில் சேமிப்பு கிடங்கு திறப்பு appeared first on Dinakaran.