×
Saravana Stores

பார்முலா 4 ரேசிங் போட்டியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை நடவடிக்கை

திருவொற்றியூர்: பார்முலா 4 ரேசிங் கோட்டியை முன்னிட்டு அண்ணாசாலை, காமராஜர் சாலையில் இன்று முதல் வரும் 1ம் ேததி வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் பார்முலா 4 பந்தய நிகழ்வான ‘சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட்’ இன்று முதல் வரும் 1ம் தேதி வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றி நடைபெறுகிறது.
இந்த போட்டி இன்று முதல் வரும் 1ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:
*காமராஜர் சாலையில் தெற்கில் இருந்து வரும் வாகனங்கள், போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சாலை, சென்ட்ரல் லைட் பாயின்ட், ஈவெரா சாலை வழியாக சென்றடையலாம்.
* அண்ணா சாலையில், வாலாஜா பாயின்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.
* சிவானந்த சாலை மற்றும் கொடி மர சாலை முற்றிலும் மூடப்படும்.
* காமராஜர் சாலையில் வடக்கில் இருந்து வரும் வாகனங்கள், சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
* சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள், பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம், பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
* முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மர சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்கு பதிலாக, பல்லவன் சாலை, ஈவெரா சாலை, சென்ட்ரல் ரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலை வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்
தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈவெரா சாலை, ஆர்.ஏ,மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

The post பார்முலா 4 ரேசிங் போட்டியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Formula 4 ,Tiruvottiyur ,Annasalai, Kamarajar road ,Metropolitan Traffic Police ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூரில் வாயு கசிவு விவகாரம்...