×
Saravana Stores

மாமல்லபுரம் அருகே உற்பத்தியான உப்பை லாரியில் அனுப்பும் பணி தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே உப்பளத்தில் உற்பத்தி செய்த உப்பை ஆந்திராவுக்கு லாரியில் ஏற்றி அனுப்பும் பணியில் உப்பள தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தூத்துக்குடி, வேதாரண்யம், மரக்காணம், கடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. இவற்றில், உப்பளத்துக்கு பெயர்போன ஊர் தூத்துக்குடிதான். இங்கு, அதிகமான அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச உப்பு உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது. 2வது இடத்தில் அமெரிக்காவும், 3வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட உப்பளத்திற்கு கடல்நீர் கொண்டு வந்து பாத்திகளில் பாயச்செய்து காய வைத்து விடுவார்கள். கடல்நீர், வெயிலின் வெப்பம் காரணமாக நீராவியாகிவிடும். பின்னர், அடியில் உப்பு படிவுகளாக படிந்துவிடும். இந்த, உப்பு படிவுகளை கொண்ட பாத்திகள் உப்பளங்கள் என்ற பெயரில் இன்றளவும் அழைக்கப்படுகின்றன.

இங்கு, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள்தான் உப்பு உற்பத்தி உச்சத்தை தொடும் காலம். மேலும், பாத்தி கட்டுவது, உப்பை காய வைப்பது, வெட்டி எடுத்து சேர்த்து வைப்பது, லாரியில் லோடு ஏற்றுவது என எல்லா வேலையையும் தொழிலாளர்களே செய்கின்றனர். இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி இசிஆர் சாலையொட்டி 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட உப்பளத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பை ஆந்திர மாநிலத்துக்கு லாரிகள் மூலம் ஏற்றும் பணியில் 20க்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து, உப்பள தொழிலாளர்கள் கூறுகையில், ‘இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலம் ஏற்றி அனுப்புகிறோம். உப்பில் இருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் அமிர்தாஞ்சன் தைலம், விக்ஸ் தைலம், காஸ்டிக் சோடா, துணி சோப்பு உள்ளிட்ட 96 வகையான பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது’ என்றனர்.

The post மாமல்லபுரம் அருகே உற்பத்தியான உப்பை லாரியில் அனுப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Uppalam ,Andhra Pradesh ,Tamil Nadu ,Tuticorin ,Vedaranyam ,Marakanam ,Kadambadi ,
× RELATED மாமல்லபுரம் பவழக்காரன் சத்திரத்தில்...