×
Saravana Stores

நடிகைகள் பாலியல் புகார் 2 தமிழ் நடிகர்கள் மீது வழக்குப்பதிவு: விஸ்வரூபம் எடுக்கும் மலையாள திரையுலக விவகாரம்

திருவனந்தபுரம்: நடிகைகளின் புகார்களைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்த நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ், நடிகர் ஜெயசூர்யா மீது பலாத்காரம் உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் மலையாள திரையுலக விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது. நடிகைகளின் அடுத்தடுத்த பலாத்கார புகார்களால் நாளுக்கு நாள் மலையாள சினிமாத்துறை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஹேமா கமிட்டி அறிக்கையில் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகைகள் குறித்தோ, பலாத்காரம் செய்த நடிகர்கள் குறித்தோ எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. ஆனால் அறிக்கை வெளிவந்த பிறகு தங்களை பலாத்காரம் செய்தவர்கள் குறித்து சில நடிகைகள் அடுத்தடுத்து வெளிப்படையாக கூறியது மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல நடிகர்களான சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, இடைவேளை பாபு, மணியன்பிள்ளை ராஜு, டைரக்டர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது பலாத்கார புகார்கள் கூறப்பட்டன. அதைத்தொடர்ந்து நடிகர்கள் சங்க பொதுச் செயலாளர் பதவியை சித்திக்கும், கேரள சினிமா அகாடமி தலைவர் பதவியை டைரக்டர் ரஞ்சித்தும் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே மேற்குவங்க நடிகையான ஸ்ரீலேகா மித்ராவின் புகாரின் பேரில் டைரக்டர் ரஞ்சித் மீது முதல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு திருவனந்தபுரத்திலுள்ள ஓட்டல் அறையில் பூட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக ஒரு இளம் நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் சித்திக் மீது அடுத்த பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறியும், நடிகர்கள் சங்கத்தில் உறுப்பினர் ஆக்குவதாக கூறியும் முன்னணி நடிகர்கள் உள்பட 7 பேர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு நடிகை புகார் கூறியிருந்தார். அதன் பேரில் நடிகர் ஜெயசூர்யா, நடிகரும் மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான முகேஷ், நடிகர்கள் இடைவேளை பாபு, மணியன்பிள்ளை ராஜு, தயாரிப்பு நிர்வாகி நோபிள், காஸ்டிங் டைரக்டர் விச்சு, வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகிய 7 பேர் மீதும் பலாத்காரம் உள்பட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் முகேஷ் மீது இபிகோ 376 (1), 354, 452, 509 ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி ஓட்டலுக்கு அழைத்து பலாத்காரம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரின் பேரில் மரடு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். இந்த நடிகையிடம் ஆலுவாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை டிஐஜி அஜிதா பேகம், எஸ்பி பூங்குழலி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் முகேஷ் தமிழில் ஜாதி மல்லி, மனைவி ஒரு மாணிக்கம், ஐந்தாம் படை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஜெயசூர்யா : திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின் போது தன்னை கட்டிப் பிடித்ததாக நடிகை கொடுத்த புகாரின் பேரில் நடிகர் ஜெயசூர்யா மீது இபிகோ 354, 354 ஏ, 509 ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். ஜெயசூர்யா தமிழில் என் மன வானில், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இடைவேளை பாபு: மலையாள நடிகர்கள் சங்கத்தில் நீண்ட காலம் பொதுச்செயலாளராக இருந்தவர் நடிகர் இடைவேளை பாபு. நடிகர் சங்கத்தில் சேர வாய்ப்பு தருவதாக கூறி தன்னை வீட்டுக்கு வரவழைத்து மானபங்கம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரின் பேரில், அந்த நடிகையிடமும் நேற்று சிறப்புப் படை போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பேரில் நடிகர் இடைவேளை பாபு மீது இபிகோ 376, 364 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எர்ணாகுளம் வடக்கு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.

மணியன்பிள்ளை ராஜு: மலையாள சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான மணியன்பிள்ளை ராஜு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஏராளமான மலையாளப் படங்களை தயாரித்தும் உள்ளார். இந்தநிலையில் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை பலாத்காரம் செய்ததாக நடிகை கொடுத்த புகாரில், அவரிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் நடிகர் மணியன்பிள்ளை ராஜு மீது போர்ட் கொச்சி போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

* முகேஷை கைது செய்ய தடை
நடிகையின் பலாத்கார புகாரைத் தொடர்ந்து நடிகர் முகேஷ் எம்எல்ஏ முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், புகார் கூறிய நடிகை பணம் கேட்டு தன்னை பிளாக்மெயில் செய்ததாகவும், தனக்கு சாதகமாக ஏராளமான ஆவணங்கள் இருப்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒரே ஒரு வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் கூறியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 3ம் தேதி வரை முகேஷை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த மனு 3ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

* வாலிபருடன் ஓரினச்சேர்க்கை
மேற்குவங்க நடிகை ஸ்ரீலேகா மித்ராவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் டைரக்டர் ரஞ்சித் மீது மேலும் ஒரு புகார் கூறப்பட்டுள்ளது. தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி டைரக்டர் ரஞ்சித் ஓட்டலில் வைத்து மது கொடுத்து மயக்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபர் கேரள டிஜிபியிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த வாலிபர் கூறியது: கடந்த 2012ல் நான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது கோழிக்கோட்டில் பாவூட்டியிடே நாமத்தில் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது டைரக்டர் ரஞ்சித்தை சந்தித்தேன். அப்போது அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டேன். கோழிக்கோட்டிலுள்ள ஒரு ஓட்டலுக்கு வருமாறு அவர் கூறினார். ஓட்டலுக்கு சென்று பார்த்த போது ஒரு துண்டு காகிதத்தில் தன்னுடைய போன் நம்பரை எழுதித் தந்தார். மறுநாள் அவருக்கு போன் செய்தபோது பெங்களூருவிலுள்ள தாஜ் ஓட்டலுக்கு வருமாறு கூறினார். அங்கு சென்ற போது அறையில் வைத்து எனக்கு மது கொடுத்தார். பின்னர் என்னுடன் அவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். இதன் பிறகும் அவர் எனக்கு நடிக்க வாய்ப்பு தரவில்லை. இவ்வாறு அந்த வாலிபர் கூறினார்.

* முக்கிய ஆவணங்கள் சிக்கின
பிரபல நடிகரும், மலையாள நடிகர்கள் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான சித்திக் 8 வருடங்களுக்கு முன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி திருவனந்தபுரத்திலுள்ள ஓட்டலில் பூட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக ஒரு இளம் நடிகை புகார் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் சித்திக் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். இந்த நடிகையிடம் சிறப்புப் படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருவனந்தபுரத்தில் ஒரு தியேட்டரில் வைத்து ஒரு சினிமாவின் பிரிவியூ காட்சியில் வைத்து சித்திக்கை சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்டதாகவும், அப்போது திருவனந்தபுரத்தில் தான் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு வருமாறு அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.

இதன்படி 2016 ஜனவரி 28ம் தேதி அந்த ஓட்டலுக்கு சென்ற போது அறையில் பூட்டி வைத்து தன்னை சித்திக் பலாத்காரம் செய்ததாக அவர் போலீசிடம் தெரிவித்தார். நடிகையின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். இதன்படி நேற்று திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் அந்த நடிகை கூறிய ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த நடிகை குறிப்பிட்ட தேதியில் சித்திக் அறை எடுத்திருந்தது தெரியவந்தது. மேலும் நடிகர் சித்திக்கை சந்திப்பதற்காக அந்த நடிகை ஓட்டலுக்கு வந்ததும் உறுதி செய்யப்பட்டது. விருந்தினருக்கான வருகை பதிவேட்டில் அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆவணங்களை போலீசார் சேகரித்தனர்.

* நடிகை நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்
திருவனந்தபுரத்திலுள்ள ஓட்டலில் வைத்து நடிகையை பலாத்காரம் செய்தது தொடர்பாக நடிகர் சித்திக்கிற்கு எதிராக முக்கிய ஆவணங்களை போலீசார் நேற்று கைப்பற்றினர். நேற்று திருவனந்தபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வைத்து நடிகையின் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. இதில் நடிகர் சித்திக் தன்னை பலாத்காரம் செய்தது தொடர்பான முக்கிய ஆதாரங்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது.

* உதவி டைரக்டர் மீது பலாத்கார புகார்
மோகன்லால், மீனா, பிரித்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த வருடம் ப்ரோ டாடி என்ற மலையாள படம் வெளியானது. இந்த படத்தில் உதவி டைரக்டராக இருந்த மன்சூர் ரஷீத் தன்னை பலாத்காரம் செய்ததாக ஐதராபாத்தை சேர்ந்த ஜூனியர் நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

The post நடிகைகள் பாலியல் புகார் 2 தமிழ் நடிகர்கள் மீது வழக்குப்பதிவு: விஸ்வரூபம் எடுக்கும் மலையாள திரையுலக விவகாரம் appeared first on Dinakaran.

Tags : Viswaroopam ,Thiruvananthapuram ,MLA Mukesh ,Jayasuriya ,Viswaroam ,
× RELATED சபரிமலை பக்தர்களுக்கு கழிப்பறை உள்பட...