×

அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27ம் தேதி இரவு அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ மாகாணத்திற்கு சென்றார். நேற்று சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கூடி நின்று உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணை தூதர் ஸ்ரீகர் ரெட்டி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் ஒன்றிய அமைச்சர் நெப்போலியன் ஆகியோரும் முதல்வரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

அப்போது ‘செம்மொழியான தமிழ்மொழியே…’ பாடலுக்கு அமெரிக்க வாழ் தமிழ் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆடிய நடனத்தை முதல்வர் ஸ்டாலின் ரசித்து பார்த்தார். பின்னர், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினை அமெரிக்காவில் வரவேற்ற புகைப்படத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ‘கழுகு இறங்கி விட்டது’ என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, சான்பிரான்சிஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். நாளை (31ம் தேதி) புலம் பெயர் தமிழர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 2ம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். 7ம் தேதி அமெரிக்காவில் உள்ள அயலக தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து 9ம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சந்திப்புகளை மேற்கொள்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 14ம் தேதி சென்னை திரும்புகிறார்.

The post அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : US ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,San Francisco ,United States ,Tamil Nadu ,San Francisco airport ,
× RELATED அமெரிக்க பயண சிறகுகள்-1 முதலீடுகளை...