×
Saravana Stores

கரூர் மாவட்டத்தில் ‘பார்த்தீனியம்’ நச்சு செடி; கிராமம் முதல் மாநகரங்கள் வரை பரவியுள்ளது: வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்குமா?


கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு வளர்ந்து சுகாதார பாதிப்பை ஏற்படுத்தி வரும் ‘பார்த்தீனியம்’ செடிகளை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இதில், மாநகரின் புறநகர் பகுதிகளான தாந்தோணிமலை, சணப்பிரட்டி, ராயனூர், வெங்ககல்பட்டி, பசுபதிபாளையம், இனாம்கரூர், வேலுசாமிபுரம் போன்ற பகுதிகள் உள்ளன. இதில், தாந்தோணிமலையில் கலெக்டர் அலுவவகம் முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இதன் காரணமாக தாந்தோணிமலையை மையப்படுத்தி நாள்தோறும் அதிகளவு குடியிருப்புகளும், புதுப்புது கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில், தாந்தோணிமலை மற்றும் ராயனூர் பகுதியில் அதிகளவு காலியிடங்கள் மற்றும் சுற்றுச் சூழலை பாதிக்கும் பார்த்தீனியம் செடிகள் அதிகளவு உள்ளன.

மேலும், மாவட்டத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள், மாநகரங்கள் என குடியிருப்புகள், வேளாண் நிலங்களில் அதிகளில் காணப்படுகின்றன. கடந்த 1976-77ம் ஆண்டுகளில் வௌிநாடுகளிலிருந்து கோதுமை இறக்குமதியின்போது, கலந்து வந்த விதைகள் நாட்டின் பல பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த விதைகள் ஈரம் பட்ட சில நாட்களில் முளைத்து, செடியாக வளர்ந்து, ஒரு வாரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கும். இந்த பூக்களிலிருந்து வெளியாகும் நச்சு வாயுக்கள் ஆஸ்துமா போன்ற சுவாசக்கோளாறுகளையும், தோல்நோய்களையும், சுற்றுச் சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகின்றன. நீர், காற்று, கால்நடைகள் மூலம் பரவும் இந்த விதைகள் மழைக்காலங்களில் ஆங்காங்கா காடுகளாக காட்சியளிக்கின்றன. வேளாண் நிலங்களில் சாகுபடி காலங்களில் மட்டும் குறைந்து காணப்படும். பின்னர், வளர்ந்து நிலத்தை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தீனிய செடிகளை அகற்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் அந்த சமயத்தில் தமிழகம் முழுதும் அழிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் பல்வேறு இடங்களில் பார்த்தீனிய செடிகள் ஆக்ரமித்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருவதோடு, வடகிழக்குப் பருவமழையும் அக்டோபரில் தொடங்கும் என்பதால், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பார்த்தீனியத்தை அழிக்க வேளாண்மைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர் மாவட்டத்தில் ‘பார்த்தீனியம்’ நச்சு செடி; கிராமம் முதல் மாநகரங்கள் வரை பரவியுள்ளது: வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்குமா? appeared first on Dinakaran.

Tags : Karur ,Department ,Karur Corporation ,Agriculture Department ,Dinakaran ,
× RELATED காந்தி கிராமம் அருகே வடிகால்களை சிலாப் கொண்டு மூட வேண்டும்: