×

கிரானைட் குவாரிக்கு லைசென்ஸ் புதுப்பிக்க கூடாது

ஈரோடு, ஆக.29: பெருந்துறை அருகே செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிக்கு லைசென்ஸ் புதுப்பிக்க கூடாது என்று கோட்ட அளவிலான குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஈரோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி வெங்கடாசலம், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை வட்டம் சிங்காநல்லூர் கிராமத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் கிரானைட் குவாரி அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த சுரங்கத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. சிறு கனிம சுரங்க விதிகளின்படி, இந்த குவாரி செயல்படவில்லை. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இந்த குவாரி இயங்கி வருகிறது.

இங்கு பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், விதிகளுக்கு மாறாக, சுரங்கம் அமைந்துள்ள இடத்திலேயே குடியமர்த்தப்பட்டுள்ளனர். சிறு கனிம சுரங்க விதிகளின்படி, நீரோடை வாய்க்கால் மற்றும் இதர நீர் வழி பாதைகளுக்கு, 50 மீட்டர் தொலைவுக்குள் சுரங்கம் அமைக்க கூடாது. ஆனால், இந்த சுரங்கத்திற்கும், கீழ்பவானி வாய்க்காலுக்கும் இடையே 20 மீட்டர் இடைவெளியே உள்ளது. மேலும், இப்பகுதியில் உயர் மின்னழுத்த பாதை செல்கிறது. குவாரியில் பாறைகளை உடைக்க வெடிபொருட்களைப் பயன்படுத்தும் போது அதிக சத்தம் ஏற்படுகிறது.

குவாரியால் ஆடு, மாடுகள் சினை பிடிப்பதில்லை. கோழி முட்டைகள் பொறிப்பதில்லை. குடிநீரில் மாசடைந்தள்ளது. எனவே ஒப்பந்தத்தை நீட்டித்தால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, சுற்றுவட்டார விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post கிரானைட் குவாரிக்கு லைசென்ஸ் புதுப்பிக்க கூடாது appeared first on Dinakaran.

Tags : Erode ,Perundurai ,Dinakaran ,
× RELATED இருதரப்பு பிரச்சனை: கோயில் குடமுழுக்கு நிறுத்தம்