×
Saravana Stores

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் கோணத்தில் ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திர சோனி என்பவர் ஓவிய – கலைப்பிரிவு ஆசிரியராக உள்ளார். இவர் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. சமீபத்தில் 8ம் வகுப்பு மாணவி ஒருவரிடம், ராமச்சந்திர சோனி மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகக்கூறி அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் சார்பில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து பல மாணவிகள் புகார் தெரிவித்ததால் அந்த ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் (செவ்வாய்) பள்ளி திறக்கப்பட்டது. கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தலைவர் மாவட்ட கலெக்டர் ஆவார். மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பான தகவல் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் கவனத்துக்கு வந்ததும் அவர் உடனடியாக விசாரணை நடத்த குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் குழந்தைகள் நல அதிகாரிகள் சென்று மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இதில் மாணவிகள் கூறிய தகவல்களை அவர்கள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் பள்ளிக்கு சென்று ஆசிரியர் ராமச்சந்திர சோனியை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது.

இதையடுத்து ஒரு மாணவி அளித்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து ஆசிரியர் ராமச்சந்திர சோனியை கைது செய்தனர். இதைதொடர்ந்து ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது மொத்தம் 15 மாணவிகள் தனித்தனியாக புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை எச்சரித்தும் கேட்காமல் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக சில மாணவிகள் கூறி உள்ளனர். இதற்கிடையே ஆசிரியர் ராமச்சந்திர சோனி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர், 15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதான ஆசிரியர் மீது கர்நாடகாவில் புகார்
ஆசிரியர் ராமச்சந்திர சோனி, கர்நாடக மாநிலத்தில் தான் பணியில் இருந்துள்ளார். அங்கு அவர் மீது புகார் எழுந்ததால், துறை ரீதியான நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. குடும்பத்தினர் வராத நிலையில் அவர் மட்டும் நாகர்கோவிலில் தனியாக தங்கி இருந்துள்ளார்.

எங்களை வீடியோ, போட்டோ எடுப்பார்: மாணவிகள் பகீர்
மாணவிகள் தெரிவித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையின் போது, ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. எங்கள் ஊரில் உள்ளது போல் சகஜமாக தான் நடந்து கொண்டேன்’ என்று ஆசிரியர் ராமச்சந்திர சோனி கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதேசமயம் மாணவிகள் சிலர் கூறுகையில், ‘ஆசிரியர் சோனி செல்போனில் தங்களை வீடியோ எடுப்பார். போட்டோ எடுப்பார். இவரது பாட வேளை வந்தாலே பயந்து போய் நாங்கள் வெளியே ஓடி விடுவோம்’ என்று கூறியுள்ளனர்.

The post ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : Union Govt-run ,Kendriya Vidyalaya school ,Bokso ,Nagercoil ,Kendriya Vidyalaya ,Union government ,Nagercoil Angle ,Kendriya Vidyalaya School Girls ,Pocso ,Dinakaran ,
× RELATED சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது