×
Saravana Stores

1300 ஆண்டுகள் பழமையான துர்க்கை – ஜேஷ்டா தேவி சிற்பங்கள் கண்டெடுப்பு

செஞ்சி, ஆக. 29: 1300 ஆண்டுகள் பழமையான துர்க்கை, ஜேஷ்டா தேவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது. செஞ்சி அருகே செல்லப்பிராட்டி கிராமத்தில் புகழ்பெற்ற லலிதா செல்வாம்பிகை திருக்கோயில் உள்ளது. இக்கிராமத்தில் விழுப்புரத்தை சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன், செல்லப்பிராட்டி வாசுதேவன், செஞ்சி நூலகர் பூவழகன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கை, ஜேஷ்டா தேவி சிற்பங்கள் இப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டன.

இதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறுகையில், ஏரிக்கு அருகில் உள்ள வயல்வெளியில் அமைந்துள்ள பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள துர்க்கை சிற்பம் காளி என வணங்கப்பட்டு வருகிறது. எட்டு கரங்களுடன் எருமை தலைமீது பிரம்மாண்டமாக நின்றிருக்கிறாள் துர்க்கை. ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில் அம்பு, வாள், கேடயம், பாசம் ஆகியவற்றை ஏந்தி நிற்கிறாள். கால்கள் சமபங்கு நிலையில் எருமை தலைமீது நின்றிருக்கின்றன. எருமையின் கொம்புகள் மற்றும் முகம், காதுகள் பிரம்மாண்டமாக காட்டப்பட்டுள்ளன. மற்ற துர்க்கை சிற்பங்களில் இருந்து இந்த சிற்பம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஜேஷ்டா தேவி: செல்லப்பிராட்டி ஏரியில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவியின் சிற்பம் அமைந்துள்ளது. வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் திண்டின் மீது வைத்தவாறும் காணப்படுகின்றன. அருகில் மகன் மாந்தன், மகள் மாந்தி காட்சி தருகின்றனர். காக்கை கொடியும் இடம் பெற்றுள்ளது. இந்த சிற்பத்தை அப்பகுதி மக்கள் மதகு வீரன் – மதகை காக்கும் வீரன் என ஆண் தெய்வமாக வணங்கி வருகின்றனர். துர்க்கை என்று அழைக்கப்படும் கொற்றவை மற்றும் ஜேஷ்டா, தவ்வை என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பங்கள் பல்லவர் காலத்தை சேர்ந்தவை (கி.பி.7-8ம் நூற்றாண்டு) ஆகும். செல்லப்பிராட்டி கிராமம் பல்லவர் காலத்திலேயே சிறப்புற்று இருந்தது என்பதற்கு ஆதாரமாக இந்த சிற்பங்கள் அமைந்துள்ளன, என்றார்.

The post 1300 ஆண்டுகள் பழமையான துர்க்கை – ஜேஷ்டா தேவி சிற்பங்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Durga ,Lalita Selvambikai temple ,Chellappirathi ,Senchi ,Senguttuvan ,Villupuram ,Chellapprathi Vasudevan ,
× RELATED நாடு முழுவதும் துர்கா பூஜை கொண்டாட்டம்!!