×
Saravana Stores

தமிழ்நாடு முழுவதும் செப்.1 முதல் சுங்கக் கட்டண உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் செப்.1 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் வாகனங்களின் வகையை பொறுத்து ரூ.5 முதல் ரூ.150 வரை உயர்த்தப்படுகிறது.சுங்கக் கட்டண உயர்வு மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது கொடும் தாக்குதல்களை ஒன்றிய அரசு தொடுத்துள்ளது. சுங்கக் கட்டணம் மிகப்பெரிய வருமானம் தரும் தொழிலாக மாறிவிட்டது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தமிழ்நாடு முழுவதும் 25 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாகனத்தின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.150 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே பல மடங்கு கட்டண உயர்வால் அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு மேலும் தாக்குதல் தொடுக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு அமைந்துள்ளது.

அதுமட்டுமின்றி கனரக வாகனங்கள் மூலம் எடுத்துவரப்படும் அத்தியாவசியப் பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள், காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது கொடும் தாக்குதல்களை ஒன்றிய பாஜக அரசு தொடுத்துள்ளது.

சுங்க கட்டணம் மிகப் பெரிய வருமானம் தரும் தொழிலாக மாறிவிட்டது. பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் காலாவதியான சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலித்து சட்ட விரோதமாக கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. தென்னிந்தியாவில் 41 சுங்க சாவடிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் குறித்து 2023ம் ஆண்டு டிசம்பரில் மத்திய தணிக்கை ஆணையம் நடத்தியுள்ள ஆய்வில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக அம்பலப்படுத்தியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்கட்சிகள் குரலெழுப்பின. இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆண்டுக்கு ஆண்டு தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காக ஒன்றிய பாஜக அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தி வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் 25 சுங்க சாவடிகளில் உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டுமெனவும், காலாவதியான சுங்க சாவடிகளை அகற்ற வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு முழுவதும் செப்.1 முதல் சுங்கக் கட்டண உயர்வு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Marxist Communist Party ,Chennai ,Dinakaran ,
× RELATED நிலக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாடு