×

பாலின சமத்துவத்தை பேணும் வகையில் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு: இமாச்சல் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

சிம்லா: பாலின சமத்துவத்தை பேணும் வகையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தி இமாச்சல் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இமாச்சல் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2023 டிசம்பரில், பாலின சமத்துவத்தை பேணும் வகையில் பெண் குழந்தைகளின் திருமண வயதை அதிகரிப்பு குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் செயலர் எம்.சுதா தேவி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. இந்நிலையில் நேற்று இமாச்சல் மாநில சட்டசபையில் பெண்களின் திருமண வயதை 18 என்பதில் இருந்து 21 ஆக உயர்த்தும் வகையில் புதிய சட்ட மசோதாவை மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தானி ராம் ஷண்டில் தாக்கல் செய்தார். இமாச்சல பிரதேச குழந்தை திருமண தடை (திருத்தம்) மசோதா – 2024, சட்டசபையில் விவாதம் இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதாவின் மூலம் ஆண்களின் திருமண வயது 21 என்று இருப்பது போன்று, பெண்களின் திருமண வயது 21 ஆக இருக்கும். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மாநில சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் தானி ராம் ஷண்டில் கூறுகையில், ‘சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இமாச்சல பிரதேச குழந்தை திருமண தடை (திருத்தம்) மசோதா மூலம், இளம் வயதிலேயே (18 வயது) பெண்கள் திருமணம் செய்து கொள்வதால், அவர்கள் மேல் படிப்பை படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு திருமணம் தடையாக உள்ளது. பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்புகளை உருவாக்கவே, திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது’ என்று கூறினார்.

The post பாலின சமத்துவத்தை பேணும் வகையில் பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு: இமாச்சல் பேரவையில் மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Himachal Assembly ,Shimla ,Himachal ,Pradesh ,Congress ,Chief Minister ,Sukhwinder Singh Suku ,
× RELATED ஒன்றிய அமைச்சர் மூலம் அச்சுறுத்தல்;...