சென்னை: நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று (28.08.2024) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், கு. இந்திராணி, இயக்குநர்/பகிர்மானம் அனைத்து இயக்குநர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதுவரை, அறிவிக்கப்பட்ட 108 அறிவிப்புகளில், 1,50,000 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்குதல், 3 புதிய மின் பகிர்மான மண்டலங்கள் அமைத்தல், அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில், கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் மற்றும் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் திருக்கோயில் ஆகிய கோயில்களின் தேரோடும் வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைத்தல் உள்ளிட்ட 28 முக்கிய அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 78 அறிவிப்புகளுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், பணிகளை எடுத்து முடிப்பதற்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் மின் சாதனங்களை விரைந்து கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பணிகளை விரைந்து முடித்து குறித்த காலத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், வருகின்ற வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளவும், தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்காகவும், கடந்த 01.07.2024 முதல் ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள், இன்றைய நிலவரப்படி, 31,328 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன, சாய்ந்த நிலையில் இருந்த 24,943 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன, புதியதாக 15,841 மின் கம்பங்கள் இடைசெருகல் செய்யப்பட்டிருக்கின்றன, 1,53,149 இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன, 30,739 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றுடன், சுமார் 1,259 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 4,13,503 (88%) பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பராமரிப்பு பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடித்திட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
பராமரிப்பு பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின் நிறுத்தங்களின் போது, ஆங்காங்கே மின் தடை ஏற்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அவர்கள், மின் நிறுத்த நேரம் குறித்து மின் நுகர்வோர்களுக்கு முன்னரே குறுந்தகவல் (SMS) மூலமும், பத்திரிக்கை செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
The post எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார் அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.