- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய ஆனை ஆண்டு விழா
- நாகப்பட்டினம்
- திருச்சி
- மத்திய மண்டலம்
- ஐஜி
- கார்த்திகேயன்
- இந்தியா
- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் ஆண்டு விழா
*21 கண்காணிப்பு கேபுரங்கள்
*740 சிசிடிவி கேமிராக்கள்
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இந்தியாவில் பேராலய அந்தஸ்து பெற்ற 8 தேவாலயங்களில் ஒன்றாகவும், உலக புகழ்ப் பெற்ற வழிபாட்டுத் தலமாகவும் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் விளங்குகிறது. கீழை நாடுகளின் லூர்து எனப் போற்றப்படும் இப்பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நாளை (29ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8ம் தேதி நிறைவடைகிறது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான சிலுவை பாதை நிகழ்ச்சி செப்டம்பர் மாதம் 6ம் தேதியும், மறுநாள் அதாவது செப்டம்பர் மாதம் 7ம் தேதி தேர் பவனியும் நடைபெறுகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவிற்கு தமிழ்நாடு மட்டும் இன்றி மும்பை, கோவா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் நாளை(29ம் தேதி) வேளாங்கண்ணி பேராலயத்தில் திரண்டு நிற்பார்கள். இதனால் பக்தர்கள் வசதிக்காக திருச்சி மத்திய கார்த்திகேயன் தலைமையில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
தஞ்சை சரக டிஐஜி ஷியாவுல்ஹக் மேற்பார்வையில் நாகப்பட்டினம் எஸ்பி அருண்கபிலன் முன்னிலையில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த எஸ்பிக்கள், 3 ஏடிஎஸ்பிக்கள், 18 டிஎஸ்பிக்கள், 90 இன்ஸ்பெக்டர்கள், 150 சப் இன்ஸ்பெக்டர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் வேளாங்கண்ணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 21 கண்காணிப்பு கேபுரங்கள் அமைத்து போலீசார் அசாம்பாவிதங்களை தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஏற்கனவே உள்ள 15 சோதனை சாவடிகளுடன் 10 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வேளாங்கண்ணி பேராயலத்திற்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படவுள்ளது. 740 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 10 வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மற்றும் இரவு நேரங்களில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் 3 படகுகளில் கடலில் இரவு பகலாக ரோந்து பணியில் 30 பேர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். இதை தவிர 300க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதே போல் சாலையின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து பிரிவு போலீசார் போக்குவரத்து நெறிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.
The post வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி appeared first on Dinakaran.