×

குமரி பெண் டாக்டரை போல் மேலும் பலர் ஏமாந்தது அம்பலம் கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் தேர்வு நடத்தி மோசடி

*கைதான முன்னாள் பேராசிரியையிடம் நடந்த விசாரணையில் திடுக் தகவல்

நாகர்கோவில் : நாகர்கோவிலில் பெண் டாக்டரை மருத்துவ மேற்படிப்புக்கான சீட் வாங்கி தருவதாக ஏமாற்றியது போல், மேலும் பலர் ஏமாற்றப்பட்டு உள்ள தகவல் போலீசுக்கு கிடைத்துள்ளது. நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கென்னடி (60). தொழிலதிபர். கம்பி மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது மகள் டாக்டர் சுதிமா. எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். மருத்துவ மேற்படிப்புக்காக டாக்டர் சுதிமா முயற்சி செய்து வந்தார். அப்போது இவர்கள் குடும்பத்துக்கு அறிமுகமான நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்த, பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியை ஜான்சி (50) என்பவர் பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் மருத்துவ முதுகலை படிப்புக்கான சீட் வாங்கி தருவதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து ஜான்சி தெரிவித்த தகவலின் பேரில் கடலூர் பகுதியை சேர்ந்த டாக்டர் ஜானகிராமன், அவரது தந்தை அண்ணாமலை ஆகியோர் ஆனந்த கென்னடியை தொடர்பு கொண்டனர். அவர்கள் கேட்டுக்கொண்டதன் படி 23 லட்ச ரூபாயை ஆனந்த கென்னடி கொடுத்துள்ளார். ஆனால் போலியாக சேர்க்கை ஆணை தயாரித்து கொடுத்து மோசடி செய்தனர்.
இதனால் பணத்தை திரும்ப தருமாறு ஆனந்த கென்னடி கேட்டார்.

ரூ.3 லட்சத்தை மட்டும் அனுப்பி வைத்தவர்கள் ரூ.20 லட்சத்தை கொடுக்க வில்லை. இது தொடர்பாக ஆனந்த கென்னடி, குமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனத்திடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் இது தொடர்பாக விசாரித்து ஜான்சி, கடலூரை சேர்ந்த டாக்டர் ஜானகி ராமன், அவரது தந்தை அண்ணாமலை ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜான்சி கைது செய்யப்பட்டார்.

கைதாகி உள்ள ஜான்சி சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஜானகிராமன் மற்றும் அவரது தந்தை அண்ணாமலை ஆகியோரை கைது செய்து விசாரித்தால், பல தகவல்கள் வெளியாகும் என போலீஸ் தரப்பில் கூறி உள்ளனர். பலமுறை சம்மன் அனுப்பியும் இவர்கள் விசாரணைக்கு வர வில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜான்சியிடம் நடந்த விசாரணையில் போலியாக சேர்க்கை ஆணை தயாரித்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார். ஜானகிராமன் பிடிபட்டால் தான் இது தொடர்பாக உண்மைகள் வெளியாகும் என கூறி இருக்கிறார். போலீஸ் விசாரணையில் இவர்கள் மருத்துவ படிப்புக்கு மட்டுமில்லாமல் மேலும் சில உயர் படிப்புக்கு இடம் வாங்கி கொடுப்பதாக போலியாக சேர்க்கை ஆணை கொடுத்தது மட்டுமில்லாமல் ஆன்லைனிலும் தேர்வு நடத்தி ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.

ஆன்லைன் தேர்வுக்காக தனியாக பணம் வசூலித்துள்ளனர்.இவர்களின் பேச்சை நம்பி பல மாவட்டங்களிலும் இருந்து இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்திருக்கலாம் என போலீசார் கூறி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பாக புகார் அளித்தால் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஜான்சியின் செல்போனுக்கு வந்த சில அழைப்புகளின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

The post குமரி பெண் டாக்டரை போல் மேலும் பலர் ஏமாந்தது அம்பலம் கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் தேர்வு நடத்தி மோசடி appeared first on Dinakaran.

Tags : Ambalam ,Nagercoil ,Maravan ,Kumari ,Ambalam colleges ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மேற்கூரை இல்லாத வாகன பார்க்கிங்